Thursday, January 15, 2015

மலையாள "மாத்ருபூமி" தலையங்கம்

கவிஞர் சுகுமாரன்
இந்த நாடு, அவமான பாரத்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும் 2015 ஜனவரி 14 என்பது நமது வரலாற்றில் கறுப்பு எழுத்துகளால் அடையாளப்படுத்தப்பட வேண்டிய நாளாக மாறியிருக்கிறது. அன்றுதான் நாட்டின் பெருமைக்குரிய ஓர் எழுத்தாளன் வரலாற்றில் முதன் முறையாக எழுதுவதை நிறுத்தி விட்டு எழுத்தின் மரணத்தை உலகுக்கு அறிவித்திருக்கிறார். தமிழ் நாட்டிலுள்ள இந்துத்துவ சக்திகளின், சாதி அமைப்புகளின் அச்சுறுத்தலால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெருமாள் முருகன் குறித்திருக்கும் சொற்களை,எழுத்தை நேசிக்கும், தாயின் முலைப்பாலைப் போல எழுத்தை நெஞ்சில் சுமக்கும் நாட்டிலுள்ள எல்லா மனிதர்களாலும் நடுக்கமில்லாமல் வாசிக்க முடியாது.’பெருமாள் முருகன் செத்து விட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. அவனுக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. இனி ஆசிரியனாகிய பெ. முருகன் மட்டுமே உயிர்வாழ்வான். அவனை விட்டு விடுங்கள்’. சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்ட இந்துத்துவ சகதிகளோடு, ஒரு காட்டுமிராண்டித்தனமான மரபுக்கு எதிரான வெளிபாட்டை முன்வைத்த தன்மானமுள்ள எழுத்தாளனால் செய்ய முடிந்த மிக உச்சமான எதிர்ப்புத்தான் இந்த ‘மரணக் குறிப்பு’.
நாமக்கல அரசுக் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரான பெருமாள் முருகன் தமிழகத்தின் கொங்கு வட்டாரத்தின் கதையாளராகவும் வரலாற்றாளராகவும் அறியப்படுபவர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் ஆலயத்தின் பின்புலத்தில் பெருமாள் முருகண் எழுதிய மாதொரு பாகன் நாவலுக்கு எதிராக அங்குள்ள இந்து அமைப்புகள் கடந்த சில நாட்களாகக் கலவரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடை முறையில் இருந்ததாகச் சொல்லப் படும் ஒரு வழக்கத்தை அம்பலப் படுத்தும் இந்த நாவல் இண்டு மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி இந்து அடிப்படை வாதிகள் கலவரத்தில் ஈடுபட்டார்கள். 2010 ஆம் ஆண்டு முன்னணித் தமிழ்ப் பதிப்பகமான காலச்சுவடு பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டது. 2013 இல் பென்குவின் நிறுவனம் ‘ ஒன் பார்ட் உமன்’ என்ற பெயரில் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது.
கடந்த திங்கள் அன்று நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்தாளர் பெருமாள் முருகனை மண்டியிடச் செய்தார்கள்.பெருமாள் முருகனைத் தனது நாவலின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கவும் சந்தையில் மிஞ்சியிருக்கும் பிரதிகளைத் திரும்பப் பெறவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவும் இசையச் செய்த பின்புதான் இந்து அமைப்புகள் நாவலுக்கு எதிரான கலவரத்தைத் திரும்பப் பெற்றிருக்கின்றன. தன்மானத்துக்கு ஏற்பட்ட காயத்தால் பெருமாள் முருகன் , அடுத்த நாளே தனது உயிரான எழுத்தின் மரணத்தை அறிவித்தார். வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் எழுத்திற்கே அடிக்கப்பட்ட மரண மணியின் ஓசைதான் இதில் முழங்குகிறது.
நாட்டில் நிலவி வந்த மூடப் பழக்கங்களைப் பகிரங்கப் படுத்தும் எழுத்துகளை வலுவற்றதாக்கும் கும்பல், சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அநீதியை நடைமுறைப்படுத்தத் தொடங்கினால் அதற்கு முடிவே கிடையாது. உடன் கட்டையேறும் வழக்கமும் தீண்டாமையும் திரும்பி வரவிருக்கும் பாதை இது. பாரீஸ் நகரத்தில் ’ஷார்லி எப்தோ’வார இதழின் கார்டூனிஸ்டுகளையும் பத்திரிகையாளர்களையும் கூட்டுக் கொலை செய்த சம்பவத்தை அடுத்து இந்தியாவில் அரங்கேறியிருக்கும் இந்த அடக்குமுறையை, உலகெங்கிலும் எந்த நிறத்தவரானாலும் சரி, மத அடைப்படை வாதிகள் மனிதத்துவத்துகு எதிராக நடத்திய அத்துமீறலாகவே புரிந்து கொள்ள வேண்டும்.ஜெர்மானிய சிந்தனையாளரும் உளவியலாளருமான வில்ஹெம் ரீஹ் ‘ தனது பாஸிசத்தின் உளவியல்’ நூலில் விடுத்த எச்சரிக்கை முற்றிலும் பொருத்தப்பாடுடையதாக இருக்கும் சூழல்தான் உலகெங்கும் நிலவுகிறது. மதப் பேயால் பீடிக்கப்பட்ட கும்பலின் வன்முறைச் செயல்களில் அது உள்ளடங்கி இருக்கிறது. தனது விருப்பத்துக்கு எதிரானவையாகவே இருந்தாலும் மூடப் பழக்கங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து வன்முறையில் ஈடுபடும் கும்பல்கள் எந்த ஜனநாயகப் பண்பாட்டுக்கும் அச்சுறுத்தலானவையே.
இதை எதிர்க்க ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைவது கடமை. அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை போன்ற அச்சமூட்டும் சூழலுக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நடவடிக்கைகள் யார் பக்கமிருந்து உருவானாலும் அது கண்டனத்துக்குரியது. எழுத்தைக் கைவிடுவது என்ற தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் பெருமாள் முருகன் தமிழகத்தில் இன்றும் பொதுச் சமூகத்தில் நிலவும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைத் நடத்திக் கொண்டிருக்கும் ஆளுமை அவர். தான் கடைசியாக எழுதிய நாவலை தருமபுரியில் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்ல்ப்படும் தலித் இளைஞருக்கு சமர்ப்பணம் செய்திருப்பதால் அந்த நாவலைப் பலரும் வாங்கவே மறுத்ததாக மாத்ருபூமிக்கு அளித்த எதிர்வினையில் பெருமாள் தெளிவுபடுத்துகிறார்.. இந்த நாட்டில், எழுத்தின் வலிமையை நம்புகிற, எழுத்தை நேசிக்கிற எல்லா ஜனநாயக நம்பிக்கையாளர்களின் ஆதரவுக்கும் முருகன் முற்றிலும் தகுதியானவர். இந்தச் சம்பவத்தில் தேசிய அளவிலேயே எதிர்ப்பு உருவாகவேண்டும். எழுத்துக்கு எதிரான இந்தக் கொலை பாதகத்தைப் பாராமல் கண்களைப் பொத்திக் கொண்டால் நாளை அது கூட்டுக் கொலையாக மாறும். எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் ஊர் விலக்கு கற்பிக்கும் எந்தக் கலாச்சாரமும் அநியாயமானதுதான், அதீதியானதுதான். அதன் வெற்றிகள் தற்காலிகமானவை மட்டுமே. இந்தக் கலாச்சாரம் பாசிசம் இல்லை என்றால் பாசிசம் என்பது என்ன?

No comments:

Post a Comment