Wednesday, January 14, 2015

காவி பயங்கரம்

காவி பயங்கரம்

அன்று--ஏறத்தழ ஓராண்டுக்கு முன்பு--”ராமசாமி நாய்க்கனைச் செருப்பால் அடிக்கத் தவறியது நாம் செய்த மாபெரும் குற்றம் “ என எந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் குரல் கொடுத்தாரோ அதே பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர் நடுவே நாத்தழும்பேறிய ’சங்கி’ எச். ராஜா கொக்கரிப்பதை ’யு-ட்யூபில்’ பார்த்தபோது- எனக்குக் காவிக் கூட்டத்தின் காலடியில் வீழ்ந்து கிடக்கும்கலைஞர்’கள், ’புரட்சிப் புயல்கள், ’இனமான திராவிட/தமிழர் தலைவர்’கள் ஆகியோரின் முகத்தில் காறித் துப்ப வேண்டும் எனும் பேராவேசம் வந்தது ! இன்று ‘தமிழ் இந்து’வில் வந்துள்ள-- பெருமாள் முருகன் தன் கையாலேயே வரைந்துள்ள அவரின் ’இறப்புச் செய்தி’யைப் படித்தபோது ’பாஞ்சாலி சபத’த்தில் பாரதி சாடிய ’நெட்டை மரங்களை விடவும் கீழானவர்களாகத் தரங்கெட்டுப் போய்விட்ட திராவிடர்களையும் அவர்களின் தலைவர்களையும் என்ன சொல்லித் திட்டுவது என்று தெரியாமல் தவியாய்த் தவிக்கிறேன் ! சிறு வயது முதலே கெட்ட வார்த்தை பேசப் பழக வில்லையே என இப்போது மிகவும் ‘வெட்கப்படுகிறேன்’ ! வேதனைப் படுகிறேன் ! 

தில்லியில் காமராசர் வீட்டுக்குத் தீ வைக்க முற்பட்ட காவி தடியர்களுக்குத் தலைமை தாங்கிய வாஜ்பாயியை ’நல்லவர்’ என்றழைத்தவர்கள்,/ 2002 குஜராத் கலவரத்தில் 2000 பேருக்கு மேலான இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த கொலைபாதக அரசின் தலைவரை ‘வல்லவர்’ என வாய் கூசாமல் மெச்சியவர்கள், இன்று இவர்கள் ’படித்த’ ’ஈரோட்டுப் பள்ளி’யை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்ட காவி பயங்கரவாதிகளைக் கண்டு கதி கலங்கி நிற்கிறார்களே ! எங்கே போயிற்றுப் ’புலியை முறத்தால் துரத்திய’ புற நானூற்று வீரம்? ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கொடுக்கான பா.ஜ.க.வுக்குப் பட்டுக் கம்பளம் விரித்த அம்மாவுக்கும், அண்ணன் கலைஞருக்கும் மாறி மாறி ’மாலை போடுகிற ‘ பெரியாரின் நேரடி மற்றும் நிரந்தர வாரிசு தன் வாலைச் சுருட்டிக் கொண்டு மூலையில் முக்காடு போட்டுக் கொண்டதே ஏன் ?அய்யாவின் சொத்தை அனுபவிக்கிற காரணத்துக்காகவேனும் குறைந்தபட்ச நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா ? ‘ தன் வாழ்நாளிலேயே வெற்றி வாகை சூடியவர் எமது தலைவர் பெரியார்’ என வாய்ச் சவடால் பேசிய இவர்கள் இன்று அவர் சாடிய சாதியத்தை அரசியலிலும் ,சமூக வாழ்விலும் கலந்து விட்டதாலும்,/கிடைக்கிற பட்டம் பதவிகளைத் தங்களின் குடும்பக் கொள்ளைக்குப் பயன்படுத்துவதாலும் அதிகார பீடத்தில் இவர்களே ஏற்றிவிட்ட சனாதன/பார்ப்பனீய சக்திகளைக் கண்டு நடுநடுங்கிச் சாகிறார்கள் ! இந்த அழகில் இவர்கள் ”ஈழத் தமிழனுக்கும் நாங்களே காவல்” என வெட்கமின்றிக் கத்துகிறார்கள் ! கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைக் கீறி வைகுந்தத்தைக் காட்டப் போகிறானாம் !

சாமிக்கண்ணு

No comments:

Post a Comment