Thursday, January 15, 2015

பெரியாரே முதல் காரணம்!

பெருமாள் முருகன் பிரச்சனைக்கு
பெரியாரே முதல் காரணம்!


பாமக அரசியலுக்கு
இளவரசன் களப்பலி
பாஜக அரசியலுக்கு
பெருமாள் முருகன் முதல்பலி!
பெரியார் பிறந்த மண்ணில்
காதலுக்கும் உரிமையில்லை
கருத்து சொல்லவும் இடமில்லை
இரண்டுக்கும் காரணம்
பெரியாரே என்பது குற்றச்சாட்டு
பெரியார் பேரன், பேத்திகள்
பொங்கோ பொங்கென்று
பொங்கித்தீர்க்கிறார்கள்
பொங்கலும் அதுவுமாய்!
இப்படி பொங்கவே
தேவையில்லை
பெருமாள் முருகனின்
பிரச்சனைக்கு
பெரியாரே முதல் காரணம்.
இளவரசன் தற்கொலைக்கும்
ஈரோட்டுக் கிழவனே முழுப்பொறுப்பு.
இல்லையென்போர்
என் கேள்விக்கு பதில் சொல்க
சாதிக்கு வெளியில்
காதலிக்க ஊக்குவித்த
பெரியார் தானே
இளவரசனை
இல்லாமல் ஆக்கினார்?
சுயஜாதி விமர்சனமே
சுயமரியாதையின் அடிப்படையென
சொன்னதுவும் அவர் தானே?
அதைச் செய்தது தானே
பெருமாள் முருகன்
பிரச்சனைக்கு மூலகாரணம்?
ஜாதிக்கு வெளியே காதலிக்க
சொன்னவர் அவர் என்றால்
சுயஜாதி விமர்சனத்தை
செய்வித்தவர் அவர் என்றால்
இளவரசன் சாவுக்கும்
பெருமாள் முருகன் பிரச்சனைக்கும்
பெரியார் தானே முதல் பொறுப்பு?
இல்லையென மறுப்பீரா?
எதிர்வாதம் செய்வீரா?
சாதியென்னும் சாக்கடையும்
மதம் என்கிற மாய்மாலமும்
ஈருடல் ஓருயிராய்
இணைந்து உறைந்து
கெட்டித்த கற்பாறையாய்
அழுத்திப்பிணைத்து
ஒட்டுமொத்த சமூகத்தையும்
சீரழித்த கொடுமைக்கு எதிராக
பல்கலை பட்டமெதுவும்
படிக்காத பாமரக்கிழவனவன்
தன்பாட்டுக்கு சில திரிகளை
கொளுத்திப்போட்டார்
அவை ஒவ்வொன்றாய்
நின்று நிதானமாய்
வெடித்துச் சிதறுகின்றன
கெட்டித்த தமிழ்ச்சமூகம்
அசைந்து கொடுக்கிறது
கொஞ்சம் கொஞ்சமாய்
அதன் சாதிவெறியும் மதவெறியும்
படிப்படியாய் சரிகின்றன
பாதிக்கப்பட்ட ஆதிக்க சாதிகளும்
மாய்மால மதவெறி கும்பல்களும்
இன்ன செய்வதென்றறியாது
எதிர்வினை என்னும் பெயரில்
வன்முறையை ஏவுகின்றார்
ஈடுகொடுக்க முடியாத
இளவரசன்களும்
பெருமாள் முருகன்களும்
தற்கொலை செய்துகொண்டு
தப்பிக்க பார்க்கின்றார்
நம் அனுதாபம் அவர்க்குண்டு
அதில் என்றும் மாற்றமில்லை
ஆனால் ஆராதிக்க ஒன்றுமில்லை
ஆயிரம் ஆண்டு தொடர்போரில்
இத்தகைய இழப்புக்கள் ஏராளம்
சாதி மீறிய காதல்
இளவரசன் சடலத்தோடு
முடியவில்லை
கருத்துரிமைப்போரும்
பெருமாள் முருகனின்
பேனாமூடிக்குள்
முடங்கிவிடாது
காதல் மற்றும் கருத்துரிமை
இரண்டுக்கும் தோற்றுவாய்
தலைக்குள் இருக்கும் மூளை
தமிழருக்குத் தலையும்
அதற்குள் கொஞ்சம் மூளையும்
இருக்கும் மட்டும்
இரண்டுமே தொடரும்
வெவ்வேறு வடிவில்
வெவ்வேறு வழியில்
எல்.ஆர். ஜெகதீசன்

No comments:

Post a Comment