Thursday, January 15, 2015

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்!

அமுதன் ஆர்.பி.
ஜனவரி 13 அன்று மாலை 4 மணி அளவில் சென்னைப் புத்தககண்காட்சியில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினோம்.



"கருத்துரிமையைப் பாதுகாப்போம்" என்கிற கோஷத்தைத் தாங்கியபடி அமைதியாக கண்காட்சிக்கு முன்பு இருக்கும் வெளியில் நின்றிருந்தோம். சிலர் அரங்கினுள் போய் எல்லாக் கடைகளிலும் துண்டறிக்கையை விநியோகித்தோம். சிலர் போராட்டம் நடக்கிற இடத்தைச் சுற்றி வருகிற போகிற பொதுமக்களுக்கு துண்டறிக்கையை விநியோகித்தோம்.
பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், நாடகக் கலைஞர் பிரளயன், பத்திரிக்கையாளர் மயிலை பாலு, பத்திரிக்கையாளர் அ. குமரேசன், இயக்குநர் பா.ரஞ்சித், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் கால சுப்ரமணியம், நாடகக்கலைஞர் ஷ்ரீஜித், நாடகக்கலைஞர் பிரகதீஷ், தோழர் ஆளூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), தோழர் அற்பதம் அம்மாள், தோழர் திருமுருகன் காந்தி, நாடக்கலைஞர் கருணா பிரசாத், கவிஞர் பிரான்சிஸ் கிருபா, கவிஞர் குட்டி ரேவதி, கவிஞர் பிரேமா ரேவதி, கவிஞர் தி.பரமேஸ்வரி, பதிப்பாளர் அகநாழிகை பொன்.வாசுதேவன், பத்திரிக்கையாளர் ஜெனி, பத்திரிக்கையாளர் ஜீவசுந்தரி, பத்திரிக்கையாளர் கவின்மலர், பத்திரிக்கையாளர் தயாளன், தோழர் சிராஜ், கவிஞர் வெயில், ஆவணப்பட இயக்குநர் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார், ஆவணப்பட இயக்குநர், ஆர்.ஆர்.சீனிவாசன், திரைக்கலைஞர் திருவண்ணாமலை முருகன், கவிஞர் சாம்ராஜ், ஆவணப்பட இயக்குநர், ஆர்.பி.அமுதன், பதிப்பாளர் பரிசல் சிவ செந்தில்நாதன், ஓவியர் கார்த்திக் மேகா, இளவேனில், மொழிபெயர்ப்பாளர் பாஸ்கர், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், தமிழ் ஸ்டுடியோ மாணவர்கள், மற்றும் பல வாசகர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
தொலைக்காட்சி நிருபர்கள் வந்து எம்மில் பலருடன் பேட்டி கண்டனர். பெருமாள் முருகனுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றியும் பெருமாள் முருகனை நாம் ஏன் ஆதரிக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு விளக்கினோம்.
இருபது நிமிடங்களுக்குள் போலீஸ் அதிகாரிகள் வந்துவிட்டனர். என்னிடம் வந்து என்ன இங்கு கூட்டம்? அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி இங்கு கூடலாம் என்று மிரட்டத் தொடங்கினர். இதை எதிர்பார்த்து இருந்த நான் "நண்பர்கள் அமைதியாகக் கூடியுள்ளோம். இன்னும் சற்று நேரத்தில் கலைந்து விடுவோம்" என்று அவர்களுக்கு விளக்க முற்படுகையில் "அரெஸ்ட் ஹிங்" "டேக் ஹிங்" என்று என் கையைப் பிடித்து இழுக்கத் தொடங்கினார் அந்த அதிகாரி.
சுற்றி இருந்த தோழர்கள் அந்த அதிகாரியைத் தடுக்க, அவர் தோழர்களைப் பார்த்து "இவனைத் தூக்கு, அவனைத் தூக்கு" என்று சினிமா வில்லன் ரேஞ்சில் கட்டளை இடத் தொடங்கினார்.
தோழர்கள் காவல்துறையின் இந்த அணுகுமுறையை ஆட்சேபித்தனர்.
எல்லோரும் ஒற்றுமையாக எதிர்ப்பைக் காண்பிக்கத் தொடங்கியதும் அந்த அதிகாரி பின்வாங்கி "இன்னும் ஐந்து நிமிடங்களில் கலைந்து போகவேண்டும்" என்று போய்விட்டார்.
பிறகு மீண்டும் கூடிய நாங்கள் அமைதியாக நின்று எங்கள் எதிர்ப்பைக் காட்டினோம்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி எங்களைக் கவனித்தபடி இருந்தனர்.
தொலைக்காட்சியினரும் பத்திரிக்கையாளர்களும் கூடி நின்று இதைப் பதிவு செய்தனர்.
எம்மில் சிலர் புத்தக பதிப்பாளர் சங்க நிர்வாகிகளை சந்திக்க விளைந்த போது அவர்களே வெளியே வந்தனர்.
நாங்கள் அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தோம். பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கடைய்டைப்போ, ஒரு அறிக்கையை வெளியிடவோ செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
பெருமாள் முருகனுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று சொன்னவர்கள் பிறகு ஒலிபரப்பு மூலமாக "யாரும் துண்டறிக்கை வெளியிடக்கூடாது" என்று அறிவித்தனர்.
நாங்கள் வெளியிட்ட துண்டறிக்கையை கண்காட்சிக்குள் யாரும் வெளியிட்டால் தடுக்க வேண்டும் என்று போலீசுக்கும் வேண்டுகோள் விடுத்ததாகவும் கேள்விப்பட்டோம்.
இரண்டு பாஜகவினர் எங்களது ஆர்ப்பட்டத்திற்கு எதிராக புகார் கொடுத்ததால் தான் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது என்று காவல் அதிகாரிகள் நம் தோழர்கள் சிலரிடம் பகிர்ந்து கொண்டனர்.
பாஜகவிற்கு மட்டும் தான் போலீசா? மற்றவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் தானே? மேலும் காவல்துறை மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது இல்லையா?
தன் சொந்த ஊரில் ஒரு எழுத்தாளன் வாழ பாதுகாப்புக் கொடுக்க முடியாத போலீஸ் அவனுக்கு ஆதரவாக அமைதியாக யாரும் கூடக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம்?
புத்தகக் கண்காட்சிக்குள் புதிய புத்தகங்களை வெளியிட்டபடி இருக்கும் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் என்ன செய்யப் போகிறார்கள்?

No comments:

Post a Comment