Thursday, January 15, 2015

பெருமாள் முருகனுக்கான பிரதிநிதிகள் யார்?

ஆழி செந்தில்நாதன்
பெருமாள் முருகனுக்காக என்ன செய்யவேண்டும்? கடந்தவாரம் ஒரு சடங்குத்தனமான முயற்சியை எடுத்தேன். நம்மூர் அரசியலில் அது எடுபடவில்லை. இப்போது நிலைமை இவ்வளவு முத்தி்ப்போயிருக்கிறது. பெருமாள் முருகன் வெறும் பெ.முருகனாக சுருங்கிவிடுவார் என்றால் அதைவிட பெரிய அவமானம் வேறில்லை - அவருக்கில்லை, நமக்கு.
பெருமாள் முருகனுக்கான யுத்தத்தில் பெருமாள் முருகன்தான் முன்னிலை வகிக்கவேண்டும் என்று கருதுவது சரியா? நிச்சயம் சரியல்ல. அரசியல் என்பது எப்போதுமே பிரதிநிதித்துவத் தன்மை உடையதுதான். பெருமாள் முருகனுக்காக நாம் அனைவரும் போராடவேண்டும். நாம் அவரது பிரதிநிதிகள். அவரது முடிவுகள் தோல்வியின் அறிகுறியா அல்லது சாமார்த்தியமான நகர்வா என்று கேள்விகேட்கிறார்கள். அந்தக் கேள்விகள் இப்போதைக்கு அர்த்தமற்றவை.
பெருமாள் முருகனின் படைப்புகளை தடைசெய்யவேண்டும் என்று கூறும் சாதியவாத, மதவாத சக்திகளுக்கு எதிராக போராடமுடியும், அதுதான் அவருக்கு தெம்பளிக்கும். ஆனால் போராடினால் என்ன வெற்றி கிடைக்கும் என்பது பிரச்சினை அல்ல. பொதுவாக, கருத்துரிமை போன்ற களங்களில், சாதிய, மதவாத சக்திகள் என்னதான் பெரும் படை போலத் தோன்றினாலும் அவர்கள் இறுதியில் தோற்றுத்தான்போவார்கள். இதை நாம் பல முன்னுதாரங்களில் பார்த்திருக்கிறோம்.
முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் பலர் போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் தலைநரைத்தவர்கள். புதிதாக இளம் ரத்தம் ஓடும் பல அமைப்புகள் உள்ளன. அவர்களில் பலருக்கு இந்த விவகாரத்தில் பிரச்சினையின் மையம் என்ன என்றே தெரியவில்லை. அவர்கள் பெருமாள் முருகனின் பிரச்சினையை பெருமாள் முருகனின் பிரச்சினையாக பார்க்கிறார்கள். அல்லது காலச்சுவடு அல்லது அறிவுஜீவிகளின் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள்.
பல எழுத்தாளர்கள் தங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு உருவாகும்போது உறுதியாக எதிர்த்து நிற்கவேண்டும் என்றால் அந்த உறுதி அவரிடமிருந்துமட்டுமே வரமுடியாது. அது குடிமைச் சமூகத்திடமிருந்தும் வரவேண்டும். குடிமைச் சமூகமே சாதிய சமூகமாக உள்ள நமது சமூகத்தில் குறைந்தபட்சம் அது அரசியல் செயல்பாட்டாளர்களிடமிருந்தாவது வரவேண்டும். தங்கள் பின்னால் ஒரு படை இருக்கிறது என்கிற தைரியமில்லாத சூழலில் சல்மான் ருஷ்டிகளும் தஸ்லீமா நஸ்ரின்களும் உயிருக்காக பயந்து ஓடத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இங்கே ஒரு வேதனை - பெருமாள் முருகன் ஓடுவதற்கு பதில் சரணாகதி அடையவிரும்புகிறாரோ என்கிற கேள்வியும் எழுகிறது. ஆனால் சரணாகதியடையும் கலாச்சாரம் தமிழனின் பெருங்கலாச்சாரம்தானே!
பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் இதழாளர்களும் ஜனநாயக சக்திகளும் உடனடியாக கைகோர்த்து இதை எதிர்கொள்ளவேண்டும். ஈஸ்வரன்களும் மணிகண்டன்களும் கட்டவிழ்த்துவிடும் சாதிய பயங்கரவாதத்தை முறியடிக்கவேண்டும். இது ந்மக்கு முன்பு உள்ள தேர்வு அல்ல, கட்டாயம்.

No comments:

Post a Comment