Thursday, January 15, 2015

தன் மரணத்தை தானே அறிவிக்க நேர்ந்த கொடுமை!


தன் மரணத்தை தானே அறிவிக்க நேர்ந்த கொடுமை ஒரு படைப்பாளிக்கு ஏற்பட்டு இருப்பதை தமிழகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பெருமாள் முருகனின் அறிக்கையை படித்த பிறகு துயரத்தை விட, ஆத்திரமே மேலோங்கி வருகிறது. ஒரு எழுத்தாளன் எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பதை இங்கே நாலுபேர் தீர்மானிக்க முடியுமானால், அந்த சமூகம் பாசிசத்திற்கு இரையாகிக்கொண்டு இருக்கிறது என்றே அர்த்தம். சமூகம் என்பது அந்த நாலு பேர் அல்லவென்றும் அவர்களை தீர்மானிக்க விடக் கூடாது என்றும் அறிவும், சுதந்திரமும் கொண்ட சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது. ஒரு படைப்பை தன்னிலிருந்து வெளியிட்ட பிறகு, படைப்பாளி அந்தப் படைப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறான். அந்த படைப்பு சமூகத்திற்கும், வாசிக்கிற மக்களுக்கும் சொந்தமாகிறது. கொண்டாடியோ, நிராகரித்தோ படைப்பின் ஆயுளை மக்களே தீர்மானிக்கிறார்கள். எனவே- எந்த படைப்பு மக்களிடம் செல்லக் கூடாது என்று அந்த நாலு பேர்’நினைத்தார்களோ அதனை முடிந்த வரையில் மக்களிடம் கொண்டு செல்கிற பணியை நாம் செய்ய வேண்டும். நடு வீதிகளில் கூட்டமாய் திரண்டு ‘மாதொரு பாகன்’ நாவலின் பக்கங்களை உரக்க வாசிக்க வேண்டும். மக்கள் தீர்மானிக்கட்டும். பெருமாள் முருகனையோ, அந்த நாலுபேரையோ தீர்மானிக்க விட வேண்டாம்.

மாதவராஜ்

No comments:

Post a Comment