Thursday, January 15, 2015

கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு

அமுதன் ஆர்.பி.
பெருமாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்" நாவலுக்கு இந்து அமைப்புகள் கொடுத்த எதிர்ப்பு, அந்தப் புத்தக எரிப்பு, பெருமாள் முருகனை அவர்கள் மிரட்டியது, நெருக்கடி கொடுத்தது, வலைதளங்களில், சமூக ஊடகங்களில் பலர் அது தொடர்பாக முன் வைத்த கருத்துக்கள் தொடர்பாக சென்ற வாரம் பனுவல் புத்தக நிலையத்தில் நடந்த கருத்துரிமையைப் பாதுகாப்பது பற்றிய கூட்டத்தில் வீ.அரசு, விடுதலை ராஜேந்திரன், பிரளயன், ப்ரேமா ரேவதி, சுபகுணராஜன், பெருந்தேவி, அம்ஷன் குமார், லட்சுமணன், பா ரவி, பரிசல் செந்தில்நாதன், அமுதன் ஆர்.பி. மற்றும் பல எழுத்தாளர்கள், களப்பணியாளர்கள், கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகனும் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இந்துத்துவ சக்திகள் - குறிப்பாக மோடி பிரதமராக வந்த பிறகு - தமிழ்நாட்டில் பல்வேறு தளங்களில் தங்களது பாசிச வேலைகளை வெளிப்படையாக நடத்தத் தொடங்கிவிட்டனர் என்பதற்கான அறிகுறியாகவே "மாதொருபாகன்" புத்தக எரிப்பையும் ஆசிரியர் மிரட்டப்பட்டதையும் பார்க்கவேண்டும் என்று பலர் கருதினர்.
மாதொருபாகன் ஒரு பெண்ணிய ஆதரவுப் பிரதி என்றும் சாதி எதிர்ப்புப் பிரதி என்றும் இந்நாவலில் காணக்கிடைப்பது போல தமிழ்நாட்டில் பாலியல் மற்றும் பிள்ளைப்பேறு தொடர்பான பிரச்சனைகளை மக்கள் சாதாரணமாகக் கடந்து போகிறார்கள் என்றும் இதை ஒழுக்க விஷயமாகப் பார்க்கவேண்டியதில்லை என்றும் கருத்தாளர்கள் கூறினர்.
மேலும் இது ஒரு புனைவு, இதற்கு சான்று கோருவதும் அதற்கு ஆசிரியர் பதில் கூற முனைவதும் அவசியமில்லை என்றும் நாளைக்கு "இதை மட்டுமே எழுது" என்று பாசிஸ்டுகள்/ஒழுக்கவாதிகள் சொல்வார்கள் என்கிற ஆபத்தையும் நண்பர்கள் எடுத்துரைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக "கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு" எனும் பெயரில் ஒரு மேடையை உருவாக்குவது என்றும் அதன் மூலம் கருத்துரிமைக்கு எதிரான பிரச்சாரங்களை, தாக்குதல்களை எதிர்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பாக ஒரு சிறிய நூல் ஒன்றை நண்பர்களின் ஒப்புதலோடு புத்தகக் கண்காட்சியின் போது வெளியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment