Thursday, January 15, 2015

பெருமாள் முருகன் நாவல் பற்றிய பிரச்சினை வெறுமே கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல.!


பெருமாள் முருகன் நாவல் பற்றிய பிரச்சினை வெறுமே கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல. ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார் இந்துத்துவ அமைப்புகளின் பெரும் திட்டத்தின் ஒரு சிறுபகுதி மட்டுமே. தமிழ்நாட்டில் 2016 தேர்தலுக்கு முன் ஹிந்து ஓட்டுகளை ஒரு சார்பாக ஹிந்து உணர்வுடன் திரட்டி தங்கள் ஓட்டுவிகிதத்தையும் இடங்களையும் அதிகரிப்பதே அவர்கள் நோக்கம். அதற்கான உத்திகளில் இதுவும் ஒன்று.
நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்களை முசாபர்நகர் போல தமிழ்நாட்டில் நடத்த இயலாது. தவிரமத்தியில் மோடி ஆட்சி என்பதால் இப்போது கலவர வழிமுறை அதிகம் உதவாது. எனவே மென் வன்முறை உத்திகளையே கையாள்கிறார்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூரில் ஏதேனும் பிரச்சினையைப் பயன்படுத்தி அந்த வட்டார ஹிந்து ஓட்டுகளை ஓரணி சேர்ப்பதே திட்டம்.
நம் ஹிந்து திருவிழா , நம் ஹிந்துப் பெண்கள், நம் ஹிந்து மதம் இழிவுபடுத்தப்படுகிறது என்ற பிரசாரத்தின் மூலம் கொங்கு பகுதியில் ஹிந்து ஓட்டுகளை திரட்ட நான்கு வருடம் பழைய பெருமாள் முருகன் நாவலை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் தலித் எழுச்சியை ஆதரிப்பவர், சாதியத்தை எதிர்ப்பவர் என்பதால் கொங்கு பேரவை போன்ர சாதிய அமைப்புகள் இதில் உக்கிரமாக இயங்குகின்றன.
வட தமிழ் நாட்டில் வன்னியர் ஓட்டு கைவிட்டுப் போனாலும், தலித் ஓட்டை திரட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக பி.ஜே.பி தமிழ்நாட்டில் பொங்கல் விழா என்ரு ஒன்று இருப்பதையும் தலித்துகள் இருப்பதையும் திடீரென கண்டுபிடித்துள்ளது. 35 வருடமாக எந்த பிஜேபி கட்சித்தலைவரும் கொண்டாடாத பொங்கலை அமித் ஷா இந்த முறை வட தமிழக தலித் கிராமம் ஒன்றில் கொண்டாடப் போவதாக அறிவித்தது. இன்னொரு பக்கம் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டைக் காட்டி அங்குள்ல சில சாதிகளை திரட்டிக்கொள்ள, வடபுலத்திலிருந்து தமிழின் மேன்மையை உணர, வாராது வந்த மாமணி போல நட்டு வைக்கப்பட்டிருக்கும் தருண் விஜய் எம்.பி, ஜல்லிக்கட்டுக்காக கூவத்தொடங்கிவிட்டார்.
அடுத்த சில மாதங்களில் தமிழகத்திந் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஹிந்து ஓட்டுகளை ஒருபக்கம் திரட்ட உள்ளூர் விஷயங்கள் இப்படி இந்துத்துவ அமைப்புகளால் கையில் எடுக்கப்படுவதைப் பார்க்கப் போகிறோம்.ஒரு பெரும் சதியின் சிறு பகுதியே பெருமாள் முருகன் எதிர்ப்பு. இதை உணர்ந்து ஒட்டுமொத்தமாகவே எதிர்க்கவேண்டும்.
ஞாநி

No comments:

Post a Comment