Thursday, January 15, 2015

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர் சந்திப்பு

கருத்துரிமை பாதுகாப்புக்கூட்டமைப்பு சார்பாக சென்னை ப்ரஸ் கிளப்பில் ஜனவரி 10ம் தேதி பகல் 12 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்ப்ட்டது.

தோழர் நல்லக்கண்ணு, தொல்.திருமாவளவன், வசந்திதேவி, அ.மார்க்ஸ், வ.கீதா மற்றும் பெருமாள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு

அமுதன் ஆர்.பி.
பெருமாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்" நாவலுக்கு இந்து அமைப்புகள் கொடுத்த எதிர்ப்பு, அந்தப் புத்தக எரிப்பு, பெருமாள் முருகனை அவர்கள் மிரட்டியது, நெருக்கடி கொடுத்தது, வலைதளங்களில், சமூக ஊடகங்களில் பலர் அது தொடர்பாக முன் வைத்த கருத்துக்கள் தொடர்பாக சென்ற வாரம் பனுவல் புத்தக நிலையத்தில் நடந்த கருத்துரிமையைப் பாதுகாப்பது பற்றிய கூட்டத்தில் வீ.அரசு, விடுதலை ராஜேந்திரன், பிரளயன், ப்ரேமா ரேவதி, சுபகுணராஜன், பெருந்தேவி, அம்ஷன் குமார், லட்சுமணன், பா ரவி, பரிசல் செந்தில்நாதன், அமுதன் ஆர்.பி. மற்றும் பல எழுத்தாளர்கள், களப்பணியாளர்கள், கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகனும் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இந்துத்துவ சக்திகள் - குறிப்பாக மோடி பிரதமராக வந்த பிறகு - தமிழ்நாட்டில் பல்வேறு தளங்களில் தங்களது பாசிச வேலைகளை வெளிப்படையாக நடத்தத் தொடங்கிவிட்டனர் என்பதற்கான அறிகுறியாகவே "மாதொருபாகன்" புத்தக எரிப்பையும் ஆசிரியர் மிரட்டப்பட்டதையும் பார்க்கவேண்டும் என்று பலர் கருதினர்.
மாதொருபாகன் ஒரு பெண்ணிய ஆதரவுப் பிரதி என்றும் சாதி எதிர்ப்புப் பிரதி என்றும் இந்நாவலில் காணக்கிடைப்பது போல தமிழ்நாட்டில் பாலியல் மற்றும் பிள்ளைப்பேறு தொடர்பான பிரச்சனைகளை மக்கள் சாதாரணமாகக் கடந்து போகிறார்கள் என்றும் இதை ஒழுக்க விஷயமாகப் பார்க்கவேண்டியதில்லை என்றும் கருத்தாளர்கள் கூறினர்.
மேலும் இது ஒரு புனைவு, இதற்கு சான்று கோருவதும் அதற்கு ஆசிரியர் பதில் கூற முனைவதும் அவசியமில்லை என்றும் நாளைக்கு "இதை மட்டுமே எழுது" என்று பாசிஸ்டுகள்/ஒழுக்கவாதிகள் சொல்வார்கள் என்கிற ஆபத்தையும் நண்பர்கள் எடுத்துரைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக "கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு" எனும் பெயரில் ஒரு மேடையை உருவாக்குவது என்றும் அதன் மூலம் கருத்துரிமைக்கு எதிரான பிரச்சாரங்களை, தாக்குதல்களை எதிர்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பாக ஒரு சிறிய நூல் ஒன்றை நண்பர்களின் ஒப்புதலோடு புத்தகக் கண்காட்சியின் போது வெளியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பெருமாள் முருகனை நாம் ஆதரிக்ககூடாது என்று சொல்பவர்கள் யார்?

அமுதன் ஆர்.பி.
மாதொருபாகன்' நாவல் தொடர்பான சர்ச்சையில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகப் பேசுவதை பல "டெக்னிகல்" காரணங்கள் கூறி நிராகரிக்க, எதிர்க்க முற்படுவதனால் தமிழ்நாட்டில் கருத்துரிமையைப் பாதுகாக்க, பாசிஸ்டுகளை எதிர்க்க உருவாகும் கருத்தொற்றுமையைக் குலைப்பதைத் தவிர என்ன ஏற்படும்?
காசுவை ஆதரிப்போர், எதிர்ப்போர், நிதி நிறுவனங்களை ஆதரிப்போர், எதிர்ப்போர், நாவலை ஆதரிப்போர், எதிர்ப்போர் ஆகிய எல்லோரும் ஒரு நாவலின் பிரதிகள் இந்துத்துவ சகதிகளினால் (சக்திகள் என்று அவர்களுக்கு ஏன் பெரிய வார்த்தை?) எரிக்கப்படுவதையும், ஒரு எழுத்தாளர் மிரட்டப்படுவதையும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டிக்க வேண்டும் என்பது முதல்படி.
விவாதம் வேண்டும் என்பதும் விமர்சனம் வேண்டும் என்பதும் மறுப்பதற்கில்லை. யாரும் இதற்கு அப்பாற்ப்பட்டவர் இல்லை.
இந்துத்துவ சகதிகள் எரிக்கவில்லை என்றும் பொதுமக்கள் தான் செய்தனர் என்றும் சொல்வது இந்த சகதிகள் காலம் காலமாகச் சொல்லி வரும் பொய்கள் தான்.
கோட்சே கூடத் தான் "டெக்னிகலாக" நான் ஆர்.எஸ்.எஸ். காரன் இல்லை என்று சொன்னார். அதற்காக அவரது சிந்தாந்தப் பயிற்சி, உந்துதல், துப்பாக்கி எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் இருந்து வரவில்லை என்று சொல்லமுடியுமா?
காந்தியைக் கொலை செய்த போது நான் அந்த அமைப்பில் இல்லை. போன வாரம் தான் விலகினேன் என்றால் நாங்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமா?
மேலும் இவர்கள் வேலையே பொய்யும் புரட்டையும் சொல்லி வெறுப்பையும் பகையையும் சந்தேகத்தையும் பரப்புவது தானே?
எல்லாக் கலவரங்களையும் இவர்களா முன்னின்று நடத்துகின்றனர்? கலவரங்களுக்கும் வன்செயல்களுக்கும் ஆட்களைத் தயார் செய்வது தான் இவர்கள் வேலை. பிரச்சாரம் செய்வது, ஆயுதங்கள் கொடுப்பது, வன்செயல்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்குவது, வன்செயல்கள் தடையில்லாமல் நடக்க உதவுவது, நடந்தபின் தப்பித்து ஓடுவது தான் இவர்கள் வேலை.
மாதொருபாகன் விஷயத்தில் திருச்செங்கோடு பாஜக தலைவர்களே முதலில் எல்லா வேலைகளையும் செய்திருக்கின்றனர்.
நாளொன்றுக்கு நாவலிலிருந்து இரண்டு பக்கங்களை எடுத்து அதை 5000 ஜெராக்ஸ் பிரதிகள் போட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருக்கின்றனர்.
வழக்கம் போல அதில் பெருமாள் முருகனின் எண்ணையும் இணைத்து மக்கள் அலைபேசியில் எழுத்தாளரை மிரட்டுவதற்கும் வசை பாடுவதற்கும் துணை போயிருக்கின்றனர்.
இதைத் தான் தினமலர் பத்திரிக்கை அணு உலை எதிர்ப்புப் போராளி உதயக்குமாருக்கும் செய்தது. அவரது எண்ணைப் பத்திரிக்கையில் போட்டு பொதுமக்களை அவருக்கு எதிராகத் தூண்டியது.
இப்போது நாங்கள் செய்யவில்லை. பொதுமக்கள் செய்தனர் என்கின்றனர்.
பித்தலாட்டமும் மோசடியும் தான் இவர்களின் கருவிகள்!

Press Statement in Support of Perumal Murugan!

on 10 Jan 2015
The signatories below would like bring to your attention the continuing violence and harassment of the esteemed, award-winning writer and novelist Perumal Murugan from Thiruchengodu. His novel Maathorubaagan (2010) is a fictional account of couples who are unable to bear children. Some parts of the novel includes accounts of erstwhile religious practices that have been fictionalized to suit the needs of the novel. This has been declared by some members of society to be insulting to their religious sentiments. Based on this contention, such elements have caused enormous discomfort and fear for both Perumal Murugan and his family. Even more importantly, their actions have disrupted the everyday lives of the residents of Thiruchengodu.
Perumal Murugan is a highly respected, award winning writer and a responsible member of society in Thiruchengodu and in Tamilnadu as a whole. His work has also been translated into English and has acquired national and international fame. In light of the discomfort caused to the people of his town, PErumal Murugan, as a responsible member of society, issued a statement explaining the context and content of his novel while also declaring that he will remove the name of the town in future editions. In spite of such efforts to come to a peaceful compromise, such groups continue their actions of intimidation and violence. In this context, it is a shameful fact that his democratic right to free expression is being curbed by a few who have taken law into their own hands.
Further, their actions are in direct contravention of Article 19, Section 1 of the Constitution of India which guarantees all citizens the right to Freedom of Speech and Expression. Further such groups are “Promoting enmity between different groups on the grounds of religion…”, an act explicitly outlawed under Sec. 153a of the Indian Penal Code. Apart from these public concerns of law and order, their actions have amounted to Criminal Intimidation (Sec. 503, 504, 505 IPC) and Defamation (Sec. 499, 501, 502s IPC) of Perumal Murugan and his family.
Beyond these legal concerns, the actions by such groups has caused the use of a novel that is above all a great expression of creative genius, a matter of pride for Thiruchengodu, Tamilnadu and India at large, towards ends that are violent and of malicious intent. Through such actions they attack the very basic fabric of our society that has always believed in providing artists the space and the right to be creative witnesses and commentators on everyday life, our diverse histories and our traditions. By curbing such freedom these groups are denying the basic nature of our societies that hold within them a whole range of traditions and practices that may or may not exist today, and yet form a part of our history and tradition. To document and creatively use such histories is nothing less than a civic duty. To restrict such use or violently intimidate those who perform such civic duty is an act that is an insult to our social ethos, culture, tradition, law and order.
We urge you to immediately take action against the disruption that is being caused by the actions of such groups to the people of Thiruchengodu and to Perumal Murguan. Without such immediate action, we fear for the safety of the town and of the writer.
We, the representatives of the literary, legal and academic community of Tamilnadu strongly condemn such criminal intimidation and violence and will stand by Perumal Murugan and all other artists and other citizen’s right to express themselves with freedom and dignity.
R.NallaKannu, Communist party Of India
Thol.Thirumavalavan, President, Viduthalai Chiruthaigal Katchi
Ki.Veeramani, President, Dravidar Kazhagam
G.Velmurugan, Tamizhaga Vaazhvurimai Katchi
Gopal Krishna Gandhi, Former Governor, West Bengal
Kolathur Mani, President, Dravidar Viduthalai Kazhagam
Vasanthi Devi, Former Vice Chancellor, Chennai
K.Chandru, Former Judge, Chennai
Arundhati Roy, Writer, Delhi
Anand Patwardhan, Filmmaker, Mumbai
Uma Chakravarthy, Historian, Delhi
Ramachandra Guha, Historian, Bangalore
Joe D Cruz, Sahitya Akademi awarded writer, Chennai
Su.Venkatesan, Sahitya Akademi awarded writer, Madurai
K. Satchidanandan, writer, Kerala
Paul Zacharia, Writer, kerala
Cheran, Writer, Canada
DW Gibson, Writer, USA
V.Arasu, Academician, Chennai
A.Marx, Human Rights Activist, Chennai
Gnani, Writer, Chennai
V. Suresh, President, PUCL
Chandru, Artist, Chennai
V.Geetha, Historian, Chennai
Trotsky Marudu, Artist, Chennai
Baama, writer, kanchipuram
A.Mangai, Theatre Person Chennai
Prasanna Ramaswamy, Theatre Person, Chennai
Malathi Maithri, Writer, Delhi
Kutti revathi, writer, Chennai
Sukirtha Rani, Writer, Lalapet
B Lenin, Editor, Chennai
Ram, Film Director, Chennai
Pa.Ranjith, Film Director, Chennai
Kamalakannan, Film Director, Chennai
Pralayan, Theatre Person, Chennai
Pritham Chakravarthy, Theatre Person, chennai
M.D.Muthukumaraswamy, Writer, Chennai
A.R.Venkatachalapathy, Historian, MIDS, Chennai
Anjali Monteiro, Filmmaker, Mumbai
KP Jayasankar, Filmmaker, Mumbai
Prem, Writer, Delhi
Jeyarani, Journalist, Chennai
Kavitha Muralidharan, Journalist, Chennai
Kavinmalar, Journalist, Chennai
Urvashi Butalia, Publisher, Delhi
Kannan, Publisher, Nagerkoil
S.Anand, Publisher, Delhi
Aniruddhan Vasudevan, writer, Translator, USA
J.P.Chanakya, writer, Chennai
Prema Revathi, Writer, Chennai
Ponni Arasu, Research Scholar, Chennai
Athiyan, Writer, Chennai
Jeny Dolly, Media person, Chennai
K.Natarajan, Artist, Chennai
Stalin rajangam, Writer, Madurai
Indira, Writer, Karur
Punitha Pandian, Editor, Chennai
JeevaSundari, Writer, Chennai
Kalapriya, Writer, Madurai
Isai Karukkal, Writer, Coimbatore
Sam Raj, Writer, Chennai
Subagunarajan, Writer, Chennai
Libi Aaranya, Writer, Madurai
Ilango Krishnan, Writer, Chennai
Thakkai Ve Babu, Writer, Madurai
Bharathi Krishnakumar, film maker, Chennai
Jamalan, Writer, UAE
Bhaskar Sakthi, Writer, Chennai
Nirmala Kotravai, Writer, Theni
Vasumitra, Writer, Theni
Perundevi, Writer, Chennai
Yo.Thiruvalluvar, Journalist
Aazhi Senthilnathan, Publisher
Nityanand Jayaraman, Activist, Chennai
Ajayan Bala, Writer, Chennai
Aadhavan Deetchanya, Writer, Hosur
Pamaran, writer
Megavannan Puthiyathadam, Writer
Geetha Narayanan, Activist
Ilavehnil
Devibharathi, writer
Manonmani Pudhuezhuthu, writer
Pankaj Bhutalia, filmmaker
RR Srinivasan, filmmaker
Karuna DW, Historian
G.Manikanan, Asst professor
Boutha Ayyanar, Poet
Uma Shakthi, Writer, Chennai
Amudhan R.P., Filmmaker, Chennai
Parisal Senthilnathan, Publisher
V.Jeevagiridharan, Advocate
Geedha, Research Scholar, New Delhi
E.Pa.Chinthan
Chandra Thangaraj, Writer, Poet, Chennai

சென்னைப் புத்தகக்கண்காட்சிப் போராட்டம்

ஆர்.ஆர்.சீனிவாசன்




பெருமாள் முருகனின் மீது ஏவப்பட்ட வன்முறைக்கு எதிராக
-சென்னைப் புத்தகக் காட்சியில் போராட்டம் இன்று... (13 ஜனவரி)
காவல் துறை மிக மோசமாக நடந்து கொண்டது,
,பேராசிரியர் வீ.அரசு,ஆர்.பி.அமுதன் மற்றும் பலரிடம்
காவல் துறை மிக அநாகரிகமாக நட்ந்து கொண்டது...
நடப்பது நம் எல்லோருக்கும் எதிரான வன்முறை,,
இது முளையிலேயே கிள்ளி எறியப் பட வேண்டும்,,,,,

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்!

அமுதன் ஆர்.பி.
ஜனவரி 13 அன்று மாலை 4 மணி அளவில் சென்னைப் புத்தககண்காட்சியில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினோம்.



"கருத்துரிமையைப் பாதுகாப்போம்" என்கிற கோஷத்தைத் தாங்கியபடி அமைதியாக கண்காட்சிக்கு முன்பு இருக்கும் வெளியில் நின்றிருந்தோம். சிலர் அரங்கினுள் போய் எல்லாக் கடைகளிலும் துண்டறிக்கையை விநியோகித்தோம். சிலர் போராட்டம் நடக்கிற இடத்தைச் சுற்றி வருகிற போகிற பொதுமக்களுக்கு துண்டறிக்கையை விநியோகித்தோம்.
பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், நாடகக் கலைஞர் பிரளயன், பத்திரிக்கையாளர் மயிலை பாலு, பத்திரிக்கையாளர் அ. குமரேசன், இயக்குநர் பா.ரஞ்சித், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் கால சுப்ரமணியம், நாடகக்கலைஞர் ஷ்ரீஜித், நாடகக்கலைஞர் பிரகதீஷ், தோழர் ஆளூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), தோழர் அற்பதம் அம்மாள், தோழர் திருமுருகன் காந்தி, நாடக்கலைஞர் கருணா பிரசாத், கவிஞர் பிரான்சிஸ் கிருபா, கவிஞர் குட்டி ரேவதி, கவிஞர் பிரேமா ரேவதி, கவிஞர் தி.பரமேஸ்வரி, பதிப்பாளர் அகநாழிகை பொன்.வாசுதேவன், பத்திரிக்கையாளர் ஜெனி, பத்திரிக்கையாளர் ஜீவசுந்தரி, பத்திரிக்கையாளர் கவின்மலர், பத்திரிக்கையாளர் தயாளன், தோழர் சிராஜ், கவிஞர் வெயில், ஆவணப்பட இயக்குநர் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார், ஆவணப்பட இயக்குநர், ஆர்.ஆர்.சீனிவாசன், திரைக்கலைஞர் திருவண்ணாமலை முருகன், கவிஞர் சாம்ராஜ், ஆவணப்பட இயக்குநர், ஆர்.பி.அமுதன், பதிப்பாளர் பரிசல் சிவ செந்தில்நாதன், ஓவியர் கார்த்திக் மேகா, இளவேனில், மொழிபெயர்ப்பாளர் பாஸ்கர், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், தமிழ் ஸ்டுடியோ மாணவர்கள், மற்றும் பல வாசகர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
தொலைக்காட்சி நிருபர்கள் வந்து எம்மில் பலருடன் பேட்டி கண்டனர். பெருமாள் முருகனுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றியும் பெருமாள் முருகனை நாம் ஏன் ஆதரிக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு விளக்கினோம்.
இருபது நிமிடங்களுக்குள் போலீஸ் அதிகாரிகள் வந்துவிட்டனர். என்னிடம் வந்து என்ன இங்கு கூட்டம்? அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி இங்கு கூடலாம் என்று மிரட்டத் தொடங்கினர். இதை எதிர்பார்த்து இருந்த நான் "நண்பர்கள் அமைதியாகக் கூடியுள்ளோம். இன்னும் சற்று நேரத்தில் கலைந்து விடுவோம்" என்று அவர்களுக்கு விளக்க முற்படுகையில் "அரெஸ்ட் ஹிங்" "டேக் ஹிங்" என்று என் கையைப் பிடித்து இழுக்கத் தொடங்கினார் அந்த அதிகாரி.
சுற்றி இருந்த தோழர்கள் அந்த அதிகாரியைத் தடுக்க, அவர் தோழர்களைப் பார்த்து "இவனைத் தூக்கு, அவனைத் தூக்கு" என்று சினிமா வில்லன் ரேஞ்சில் கட்டளை இடத் தொடங்கினார்.
தோழர்கள் காவல்துறையின் இந்த அணுகுமுறையை ஆட்சேபித்தனர்.
எல்லோரும் ஒற்றுமையாக எதிர்ப்பைக் காண்பிக்கத் தொடங்கியதும் அந்த அதிகாரி பின்வாங்கி "இன்னும் ஐந்து நிமிடங்களில் கலைந்து போகவேண்டும்" என்று போய்விட்டார்.
பிறகு மீண்டும் கூடிய நாங்கள் அமைதியாக நின்று எங்கள் எதிர்ப்பைக் காட்டினோம்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி எங்களைக் கவனித்தபடி இருந்தனர்.
தொலைக்காட்சியினரும் பத்திரிக்கையாளர்களும் கூடி நின்று இதைப் பதிவு செய்தனர்.
எம்மில் சிலர் புத்தக பதிப்பாளர் சங்க நிர்வாகிகளை சந்திக்க விளைந்த போது அவர்களே வெளியே வந்தனர்.
நாங்கள் அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தோம். பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கடைய்டைப்போ, ஒரு அறிக்கையை வெளியிடவோ செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
பெருமாள் முருகனுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று சொன்னவர்கள் பிறகு ஒலிபரப்பு மூலமாக "யாரும் துண்டறிக்கை வெளியிடக்கூடாது" என்று அறிவித்தனர்.
நாங்கள் வெளியிட்ட துண்டறிக்கையை கண்காட்சிக்குள் யாரும் வெளியிட்டால் தடுக்க வேண்டும் என்று போலீசுக்கும் வேண்டுகோள் விடுத்ததாகவும் கேள்விப்பட்டோம்.
இரண்டு பாஜகவினர் எங்களது ஆர்ப்பட்டத்திற்கு எதிராக புகார் கொடுத்ததால் தான் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது என்று காவல் அதிகாரிகள் நம் தோழர்கள் சிலரிடம் பகிர்ந்து கொண்டனர்.
பாஜகவிற்கு மட்டும் தான் போலீசா? மற்றவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் தானே? மேலும் காவல்துறை மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது இல்லையா?
தன் சொந்த ஊரில் ஒரு எழுத்தாளன் வாழ பாதுகாப்புக் கொடுக்க முடியாத போலீஸ் அவனுக்கு ஆதரவாக அமைதியாக யாரும் கூடக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம்?
புத்தகக் கண்காட்சிக்குள் புதிய புத்தகங்களை வெளியிட்டபடி இருக்கும் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் என்ன செய்யப் போகிறார்கள்?

வாழ்த்துக்கள் பெருமாள் முருகன்!

ஆர்.ஆர்.சீனிவாசன்

இந்தியச் சாதி வெறிச் சமூ கத்தில் தன்னுடைய சொந்த சாதியினால் புறக்கணிக்கப்பட்டு, 
எவர் ஒருவர் வெறுக்கப்படுகிறாரோ அவரே தன் சமூகநீதிப் பணியை ஒழுங்காகச் செய்கிறார் என்று பொருள்,, அவரது படைப்புகள் செய்ய வேண்டிய வேலையை உன்னதமாக செய்கிறது ...
அவ்வகையில் பெருமாள் முருகன் உயர்ந்தவராகிறார்,,,,சாதியை ஒழிப்போம்,,சமத்துவத்தை வளர்ப்போம்...வாழ்த்துக்கள் பெருமாள் முருகன்.......

பெருமாள் முருகனுக்கான பிரதிநிதிகள் யார்?

ஆழி செந்தில்நாதன்
பெருமாள் முருகனுக்காக என்ன செய்யவேண்டும்? கடந்தவாரம் ஒரு சடங்குத்தனமான முயற்சியை எடுத்தேன். நம்மூர் அரசியலில் அது எடுபடவில்லை. இப்போது நிலைமை இவ்வளவு முத்தி்ப்போயிருக்கிறது. பெருமாள் முருகன் வெறும் பெ.முருகனாக சுருங்கிவிடுவார் என்றால் அதைவிட பெரிய அவமானம் வேறில்லை - அவருக்கில்லை, நமக்கு.
பெருமாள் முருகனுக்கான யுத்தத்தில் பெருமாள் முருகன்தான் முன்னிலை வகிக்கவேண்டும் என்று கருதுவது சரியா? நிச்சயம் சரியல்ல. அரசியல் என்பது எப்போதுமே பிரதிநிதித்துவத் தன்மை உடையதுதான். பெருமாள் முருகனுக்காக நாம் அனைவரும் போராடவேண்டும். நாம் அவரது பிரதிநிதிகள். அவரது முடிவுகள் தோல்வியின் அறிகுறியா அல்லது சாமார்த்தியமான நகர்வா என்று கேள்விகேட்கிறார்கள். அந்தக் கேள்விகள் இப்போதைக்கு அர்த்தமற்றவை.
பெருமாள் முருகனின் படைப்புகளை தடைசெய்யவேண்டும் என்று கூறும் சாதியவாத, மதவாத சக்திகளுக்கு எதிராக போராடமுடியும், அதுதான் அவருக்கு தெம்பளிக்கும். ஆனால் போராடினால் என்ன வெற்றி கிடைக்கும் என்பது பிரச்சினை அல்ல. பொதுவாக, கருத்துரிமை போன்ற களங்களில், சாதிய, மதவாத சக்திகள் என்னதான் பெரும் படை போலத் தோன்றினாலும் அவர்கள் இறுதியில் தோற்றுத்தான்போவார்கள். இதை நாம் பல முன்னுதாரங்களில் பார்த்திருக்கிறோம்.
முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் பலர் போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் தலைநரைத்தவர்கள். புதிதாக இளம் ரத்தம் ஓடும் பல அமைப்புகள் உள்ளன. அவர்களில் பலருக்கு இந்த விவகாரத்தில் பிரச்சினையின் மையம் என்ன என்றே தெரியவில்லை. அவர்கள் பெருமாள் முருகனின் பிரச்சினையை பெருமாள் முருகனின் பிரச்சினையாக பார்க்கிறார்கள். அல்லது காலச்சுவடு அல்லது அறிவுஜீவிகளின் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள்.
பல எழுத்தாளர்கள் தங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு உருவாகும்போது உறுதியாக எதிர்த்து நிற்கவேண்டும் என்றால் அந்த உறுதி அவரிடமிருந்துமட்டுமே வரமுடியாது. அது குடிமைச் சமூகத்திடமிருந்தும் வரவேண்டும். குடிமைச் சமூகமே சாதிய சமூகமாக உள்ள நமது சமூகத்தில் குறைந்தபட்சம் அது அரசியல் செயல்பாட்டாளர்களிடமிருந்தாவது வரவேண்டும். தங்கள் பின்னால் ஒரு படை இருக்கிறது என்கிற தைரியமில்லாத சூழலில் சல்மான் ருஷ்டிகளும் தஸ்லீமா நஸ்ரின்களும் உயிருக்காக பயந்து ஓடத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இங்கே ஒரு வேதனை - பெருமாள் முருகன் ஓடுவதற்கு பதில் சரணாகதி அடையவிரும்புகிறாரோ என்கிற கேள்வியும் எழுகிறது. ஆனால் சரணாகதியடையும் கலாச்சாரம் தமிழனின் பெருங்கலாச்சாரம்தானே!
பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் இதழாளர்களும் ஜனநாயக சக்திகளும் உடனடியாக கைகோர்த்து இதை எதிர்கொள்ளவேண்டும். ஈஸ்வரன்களும் மணிகண்டன்களும் கட்டவிழ்த்துவிடும் சாதிய பயங்கரவாதத்தை முறியடிக்கவேண்டும். இது ந்மக்கு முன்பு உள்ள தேர்வு அல்ல, கட்டாயம்.

திரு இழந்த ஊர்

பி.ஜி.சரவணன்

மைக்கூடு 
கவிழ்த்த 
செங்கோடு 
இனியென்றும் 
"திரு" 
இழந்து
நிற்கட்டும்

"குற்ற உணர்வு"

கிருஷ்ண பிரபு
பெருமாள்முருகன் செத்துவிட்டான்" என்று படித்தபோது கண்ணைக் கசக்கி அழவெல்லாம் இல்லை. எனினும் ஆகப்பெரிய "குற்ற உணர்வு" ஏற்பட்டது.
இந்த குற்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கக்கூடியதுதான். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். "நான் தொகுத்த புத்தகங்கள் தவிர்த்து, நான் எழுதிய கவிதை, நாவல், கட்டுரை, சிறுகதை மற்றும் பதிப்பித்த புத்தகங்களைத் திரும்பிப் பெற்றுக்கொள்கிறேன்..." என்று பிசாசாக எழுதித் தள்ளிய பெருமாள்முருகன் சொல்லி இருக்கிறார்.
"தீட்டுத் துணி, சித்தன் போக்கு, கு.ப.ரா, தற்போது சி.சு. செல்லப்பா வின் சிறுகதை" என்று பெருமாள்முருகன் தொகுத்த புத்தகங்கள் இருக்கின்றன. இந்த மாதிரி இன்னும் ஒரு ஐம்பது எழுத்தாளர்களை பேராசிரியர் பெ. முருகன் தொகுக்க வாய்ப்பிருக்கிறது. சங்க இலக்கியம் சார்ந்து போதிய ஆழமான பரிட்சயம் முருகனுக்கு இருக்கிறது. அது சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பும் இருக்கிறது.
பெருமாள்முருகன் பேனாவை உடைத்தால் என்ன? பேராசிரியர் முருகன் தட்டச்சு செய்ய மாட்டாரா?
இணையத்தில் உலவும் ரூமார்கள் தாங்க முடியவில்லை. காலையில் கூட முருகன் வீட்டாரிடம் பேசினேன்:
"பாருங்க பிரபு... அவர் இப்போதான் கொஞ்சம் அசந்து தூங்கறாரு... நீங்க பேசினிங்கன்னு சொல்றோம்... அவரே நிதானமா உங்களைக் கூப்பிடுவாரு" என்றார்கள்.
துப்பாக்கிப் பட விஜய் மாரிதி அவர்களிடம் கூறினேன்: "ஐ ஆம் வெயிட்டிங்..."

மலையாள "மாத்ருபூமி" தலையங்கம்

கவிஞர் சுகுமாரன்
இந்த நாடு, அவமான பாரத்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும் 2015 ஜனவரி 14 என்பது நமது வரலாற்றில் கறுப்பு எழுத்துகளால் அடையாளப்படுத்தப்பட வேண்டிய நாளாக மாறியிருக்கிறது. அன்றுதான் நாட்டின் பெருமைக்குரிய ஓர் எழுத்தாளன் வரலாற்றில் முதன் முறையாக எழுதுவதை நிறுத்தி விட்டு எழுத்தின் மரணத்தை உலகுக்கு அறிவித்திருக்கிறார். தமிழ் நாட்டிலுள்ள இந்துத்துவ சக்திகளின், சாதி அமைப்புகளின் அச்சுறுத்தலால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெருமாள் முருகன் குறித்திருக்கும் சொற்களை,எழுத்தை நேசிக்கும், தாயின் முலைப்பாலைப் போல எழுத்தை நெஞ்சில் சுமக்கும் நாட்டிலுள்ள எல்லா மனிதர்களாலும் நடுக்கமில்லாமல் வாசிக்க முடியாது.’பெருமாள் முருகன் செத்து விட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. அவனுக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. இனி ஆசிரியனாகிய பெ. முருகன் மட்டுமே உயிர்வாழ்வான். அவனை விட்டு விடுங்கள்’. சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்ட இந்துத்துவ சகதிகளோடு, ஒரு காட்டுமிராண்டித்தனமான மரபுக்கு எதிரான வெளிபாட்டை முன்வைத்த தன்மானமுள்ள எழுத்தாளனால் செய்ய முடிந்த மிக உச்சமான எதிர்ப்புத்தான் இந்த ‘மரணக் குறிப்பு’.
நாமக்கல அரசுக் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரான பெருமாள் முருகன் தமிழகத்தின் கொங்கு வட்டாரத்தின் கதையாளராகவும் வரலாற்றாளராகவும் அறியப்படுபவர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் ஆலயத்தின் பின்புலத்தில் பெருமாள் முருகண் எழுதிய மாதொரு பாகன் நாவலுக்கு எதிராக அங்குள்ள இந்து அமைப்புகள் கடந்த சில நாட்களாகக் கலவரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடை முறையில் இருந்ததாகச் சொல்லப் படும் ஒரு வழக்கத்தை அம்பலப் படுத்தும் இந்த நாவல் இண்டு மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி இந்து அடிப்படை வாதிகள் கலவரத்தில் ஈடுபட்டார்கள். 2010 ஆம் ஆண்டு முன்னணித் தமிழ்ப் பதிப்பகமான காலச்சுவடு பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டது. 2013 இல் பென்குவின் நிறுவனம் ‘ ஒன் பார்ட் உமன்’ என்ற பெயரில் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது.
கடந்த திங்கள் அன்று நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்தாளர் பெருமாள் முருகனை மண்டியிடச் செய்தார்கள்.பெருமாள் முருகனைத் தனது நாவலின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கவும் சந்தையில் மிஞ்சியிருக்கும் பிரதிகளைத் திரும்பப் பெறவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவும் இசையச் செய்த பின்புதான் இந்து அமைப்புகள் நாவலுக்கு எதிரான கலவரத்தைத் திரும்பப் பெற்றிருக்கின்றன. தன்மானத்துக்கு ஏற்பட்ட காயத்தால் பெருமாள் முருகன் , அடுத்த நாளே தனது உயிரான எழுத்தின் மரணத்தை அறிவித்தார். வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் எழுத்திற்கே அடிக்கப்பட்ட மரண மணியின் ஓசைதான் இதில் முழங்குகிறது.
நாட்டில் நிலவி வந்த மூடப் பழக்கங்களைப் பகிரங்கப் படுத்தும் எழுத்துகளை வலுவற்றதாக்கும் கும்பல், சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அநீதியை நடைமுறைப்படுத்தத் தொடங்கினால் அதற்கு முடிவே கிடையாது. உடன் கட்டையேறும் வழக்கமும் தீண்டாமையும் திரும்பி வரவிருக்கும் பாதை இது. பாரீஸ் நகரத்தில் ’ஷார்லி எப்தோ’வார இதழின் கார்டூனிஸ்டுகளையும் பத்திரிகையாளர்களையும் கூட்டுக் கொலை செய்த சம்பவத்தை அடுத்து இந்தியாவில் அரங்கேறியிருக்கும் இந்த அடக்குமுறையை, உலகெங்கிலும் எந்த நிறத்தவரானாலும் சரி, மத அடைப்படை வாதிகள் மனிதத்துவத்துகு எதிராக நடத்திய அத்துமீறலாகவே புரிந்து கொள்ள வேண்டும்.ஜெர்மானிய சிந்தனையாளரும் உளவியலாளருமான வில்ஹெம் ரீஹ் ‘ தனது பாஸிசத்தின் உளவியல்’ நூலில் விடுத்த எச்சரிக்கை முற்றிலும் பொருத்தப்பாடுடையதாக இருக்கும் சூழல்தான் உலகெங்கும் நிலவுகிறது. மதப் பேயால் பீடிக்கப்பட்ட கும்பலின் வன்முறைச் செயல்களில் அது உள்ளடங்கி இருக்கிறது. தனது விருப்பத்துக்கு எதிரானவையாகவே இருந்தாலும் மூடப் பழக்கங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து வன்முறையில் ஈடுபடும் கும்பல்கள் எந்த ஜனநாயகப் பண்பாட்டுக்கும் அச்சுறுத்தலானவையே.
இதை எதிர்க்க ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைவது கடமை. அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை போன்ற அச்சமூட்டும் சூழலுக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நடவடிக்கைகள் யார் பக்கமிருந்து உருவானாலும் அது கண்டனத்துக்குரியது. எழுத்தைக் கைவிடுவது என்ற தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் பெருமாள் முருகன் தமிழகத்தில் இன்றும் பொதுச் சமூகத்தில் நிலவும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைத் நடத்திக் கொண்டிருக்கும் ஆளுமை அவர். தான் கடைசியாக எழுதிய நாவலை தருமபுரியில் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்ல்ப்படும் தலித் இளைஞருக்கு சமர்ப்பணம் செய்திருப்பதால் அந்த நாவலைப் பலரும் வாங்கவே மறுத்ததாக மாத்ருபூமிக்கு அளித்த எதிர்வினையில் பெருமாள் தெளிவுபடுத்துகிறார்.. இந்த நாட்டில், எழுத்தின் வலிமையை நம்புகிற, எழுத்தை நேசிக்கிற எல்லா ஜனநாயக நம்பிக்கையாளர்களின் ஆதரவுக்கும் முருகன் முற்றிலும் தகுதியானவர். இந்தச் சம்பவத்தில் தேசிய அளவிலேயே எதிர்ப்பு உருவாகவேண்டும். எழுத்துக்கு எதிரான இந்தக் கொலை பாதகத்தைப் பாராமல் கண்களைப் பொத்திக் கொண்டால் நாளை அது கூட்டுக் கொலையாக மாறும். எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் ஊர் விலக்கு கற்பிக்கும் எந்தக் கலாச்சாரமும் அநியாயமானதுதான், அதீதியானதுதான். அதன் வெற்றிகள் தற்காலிகமானவை மட்டுமே. இந்தக் கலாச்சாரம் பாசிசம் இல்லை என்றால் பாசிசம் என்பது என்ன?

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல்

முருகானந்தம் ராமசாமி

கோவில் திருவிழாக்களில் அம்மா,அக்கா,தங்கை,மனைவி, மைத்துனி, என உறவுகள் சூழ்ந்திருக்க 'ஆடல்பாடல்' என்கிற பெயரில் ஆபாசநடனத்தை விடியவிடியப்பார்க்கும் நிலையுள்ள சூழலில் ஒரு இலக்கியப்பிரதி தங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக கூப்பாடு போடுவது அபத்தத்தின் உச்சமென்றால் அதற்காகநூலாசிரியரை மனச்சிக்கலில் தள்ளியுள்ளது ஆபத்தின்உச்சம். கொங்குவேளாளர்களின்குலக்கதையாடலாலான 'பொன்னர்-சங்கர்' உடுக்கடிக்கதைப்பாடலை தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் தக்கவைத்துள்ள பெருங்கலைஞர்கள் ஒருவரும் கவுண்டர்களல்ல! மாறாக இச்சமூக அடுக்கின் கீழ்மட்டத்தில் வைக்கப்பட்ட சாதியினர்! அவர்களை ஆதரிக்கவோ,அந்தக்கலைகளை தக்கவைக்கவோ துப்பில்லாத ஆபாசநடனங்களின் அடிமைகள் பண்பாடுகுறித்துப்பேசுவதில் அச்சொல்கூட அருவருப்பை அடையும்! நீங்களெல்லாம்தான் எனது பண்பாட்டின் காவலர்களென்றால் எனது வாழ்வின் பேரவமானம் வேறில்லை! அறிவாண்மை கொண்டபடைப்பாளிகள் மனநோயாளிகளாகவும், அதிகாரவெறிகொண்ட மனநோயாளிகள் பண்பாட்டின் காவலர்களாகவும், ஆவார்களென்றால் அந்த நாற்றமெடுத்த பண்பாட்டில் பங்கேற்க எனக்கு எதுவுமில்லை...!

விருத்தாசலம் போராட்டம்!

கரிகாலன் கார்க்கி

போலீஸ் ஸ்டேஷனைக் கண்டால் ஒதுங்கிப் போன கிராமத்துப் பிள்ளைக்கு வீதியில் இறங்கி போராடக் கற்றுக் கொடுத்தது ஈழப் போராட்டம்.அரசியல்,மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு போராட திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம்.
நேற்று பெருமாள்முருகனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியபோது விருத்தாசலம் காவல்நிலைய ஆய்வாளர் கடுமையாக மிரட்டினார்.மிரட்டலுக்குப் பணியாமல் கண்டனக்குரல் ஒங்கிஒலித்தது.
போராட்டத்தில் எழுத்தாளர் இமையம்,சிபிஎம் அசோகன்,திக இளங்கோவன்,இளந்திரையன்,திமுக இராமு,விசிக ஐயாயிரம்,கவிஞர் இரத்தினபுகழேந்தி,கவிஞர் ஹபீப்ரஹ்மான் என தோழர்கள் பங்கேற்று தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.துண்டறிக்கை விநியோகிக்கப் பட்டது.

படைப்பாளிகளுக்கு எதிரான மிரட்டல்!

தலையங்கம் - படைப்பாளிகளுக்கு எதிரான மிரட்டல்!
சமூகம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வரும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு மதவாத சக்திகள், ஜாதியவாதிகளைத் தூண்டிவிட்டு நடத்தி வரும் போராட்டம் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவாகும். இந்த நிலையில் படைப்பிலக்கியவாதிகள் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நம்பிக்கையைத் தருகிறது.
திருச்செங்கோடு தேர்த் திருவிழா நாளில் திருமணமான ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் உறவு கொள்ளும் ஒரு பழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன் நிலவியதை கதைக்களம் சுட்டுகிறது என்பதாலேயே திருச்செங்கோட்டையே இழிவுபடுத்துவதாக மதவாத சக்திகள், உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கதவடைப்பு நடத்தும் அளவுக்கு எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளனர். ஒரு படைப்பாளி, சமூக தொன்மங்களை தனது கற்பனை கலந்து படைப்பாக்கும் உரிமைகளை அச்சுறுத்துவது மிக மோசமான வன்முறை என்றே கூற வேண்டும். தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் சங்பரிவாரங்கள், இத்தகைய பிரச்சினைகளை ஆங்காங்கே உருவாக்கி வருகின்றன. அந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது தெரிகிறது. இந்த நாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது எதிர்ப்புகள் கிளம்புவதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும்?
அய்வருக்குப் பத்தினியான திரவுபதியை மதிப்பவர்கள், குந்திதேவி, சூரியனோடு உறவுகொண்டு கர்ணனைப் பெற்றாள் என்பதை பயபக்தியுடன் ஏற்பவர்கள், ஒரு படைப்பிலக்கியத்தை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்? இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள ‘இந்து’ தர்மமே ‘நியோகாதர்மம்’ என்ற தர்மத்தைப் பேசுகிறது. இதன்படி குழந்தை இல்லாத ஒரு பெண், வேறு ஒரு ஆணோடு உறவுகொண்டு குழந்தைப் பெறுவதற்கு இந்து தர்மம் அனுமதிக்கிறது. இந்த ‘நியோகாதர்மம்’ பற்றி ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது: கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்பனர்களோடு உறவுகொண்டு குழந்தைப் பெறுவதை அங்கே உள்ள பார்ப்பனரல்லாதார் பெருமையாகக் கருதிய வழக்கம் இருந்தது.
நம்பூதிரிப் பார்ப்பனர், எந்த வீட்டுக்குள்ளும் நுழையும் உரிமைகளை வைத்திருந்தார்கள். வீட்டு வாசலில் ஒரு சொம்பை அடையாளமாக விட்டுச் சென்றால், உள்ளே நம்பூதிரி இருக்கிறார் என்பதற்கான அடையாளம். கணவனாக இருந்தாலும் வீட்டிற்குள்ளே நுழைய முடியாது. இந்த வரலாற்று உண்மைகளை அம்பேத்கரும் பெரியாரும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
தாய்வழிச் சமூகமாக சமூகம் இருந்த காலத்தில் உறவுகள் எப்படி இருந்தன? மிகச் சிறந்த சமூகவியல் ஆய்வாளரான ராகுல் சாங்கிருத்தியாயன் கூறுகிறார்:
“தாய் வழிச் சமூகம் நிலவிய காலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணமுறை கிடையாது. கணவன் மனைவி முறையும் இருக்கவில்லை. தன் தாயின் குடும்பத்தைச் சார்ந்த எந்த ஆணோடும் ஒரு பெண் கர்ப்பம் தரிக்கலாம். இக்காலத்தில் ஆண்-பெண் உறவை, திருமணத்தை ஏங்கல்ஸ் “குழுத் திருமணம்” (Group marriage) எனக் குறிப்பிடுகிறார். அதாவது திருமணத்தில் தனி மனிதனுக்கில்லால், குழுவுக்கு முக்கியத்துவம் இருந்தது. தாய் வழிக் குடும்பத்திலுள்ள அனைவரையும் ஆண்-பெண் எனும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால், ஒரு பிரிவு மற்ற பிரிவுடன் கணவன் மனைவி தொடர்பு கொண்டிருந்தது. ஒரு குடும்பத்தில் ‘பெண்’ என்றால் மனைவி என்றும், ‘ஆண்’ என்றால் கணவன் என்றும் நிலை இருந்தது” என்று எழுதுகிறார், சாங்கிருத்தியாயன். (நூல்: ‘மனித சமுதாயம்’ என்.சி.பி.எச். வெளியீடு)
இந்த சமூக வரலாறுகளையும் இவர்கள் நம்பும் கடவுள் புராணங்களையும் தீ வைத்து எரித்துப் பொசுக்கிட வேண்டும் என்று இவர்கள் கூறுவார்களா?
குழந்தை பெறுவதற்கான வாய்ப்பில்லாதவர்களுக்கு செயற்கைக் கருவூட்டல், சோதனைக் குழாய் குழந்தை முறைகளும், அதற்காக விந்து வங்கிகளும் வந்துவிட்டனவே. அதையெல்லாம் எதிர்த்துப் போராடுவார்களா? குழந்தைகளை வாடகைக்கு வயிற்றில் சுமக்கும் பெண்கள் அதை தொழிலாக செய்கிறார்களே. இத்தகைய பெண்கள் குஜராத்தில்தான் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றனவே. இவையெல்லாம் இவர்களின் பார்வையில் ‘புனிதம்’ கெட்டவையா? ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளராகவே போற்றப்படுகிற ஜெயமோகன், ‘விஷ்ணுபுரம்’ நாவலில் இப்படிப்பட்ட உடலுறவுகளைப் பற்றி விவரிக்கிறாரே!
வரலாற்றுக் காரணம் ஏதும் இல்லாமலே ஒரு நூலை தடைசெய்ய வேண்டும் என்று கூப்பாடு போடுவதில் நியாயம் இருக்கிறதா? பெருமாள் முருகன் எழுதியுள்ளதுபோல கடந்த நூறாண்டுகளில் சமூகத்தில் அப்படிப்பட்ட உறவு முறைகளே இருந்ததுஇல்லை என்று இவர்களால் கூற முடியுமா?
“சூத்திரர்களை” பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று கூறும் ‘மனுசாஸ்திரம்’, இப்போதும் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதே, இதைத் தடை செய்ய வேண்டும் என்று இந்த ‘சங்பரிவாரங்கள்’ கேட்டார்களா? பெரும்பான்மை மக்களை சாஸ்திரப்படியே இழிவுபடுத்தும் ஒரு கேவலத்தை இந்த சமூகம், இன்னும் சுமந்து கொண்டுதானே நிற்கிறது?
எதிர்ப்பாளர்கள் தங்கள் அமைப்பையோ, கோரிக்கையையோ முன் வைக்காமல் மிகவும் சூழ்ச்சியாக இந்த நூலுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. இந்த ஆபத்தான போக்கை எதிர்த்து தமிழ் நாட்டில் அரசியல் தலைவர்கள் இயக்கத் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்!
- பெரியார் முழக்கம் 15.01.15

பெருமாள் முருகனின் முறிந்த பேனாவை எடுத்து நாம் எல்லோரும் லண்டாய் பழகுவோம்.

கவிதா முரளிதரன்

கணவருடன் பாலியல் உறவு கொள்ள மறுக்கும் பெண்ணை பட்டினி போட்டு கணவன் கொல்லலாம்  என்று சட்டம் இயற்றப்பட்ட ஒரு நாட்டில், பெண் கவிதை எழுத துணிந்தால் அந்த கவிதையின் பாடு பொருள் என்னவாக இருக்கும்? அதை விட முக்கியமாக அவள் என்ன பெயரில் கவிதை எழுதுவாள்?

“Anon, who wrote so many poems without signing them, was often a woman.”  ―

என்கிறார் விர்ஜினியா வுல்ப். தனது கையெழுத்தை இடாமல் பெயரற்றவர்களாக கவிதை எழுதிச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

தனது மகளின் கவிதைகளில் தனது பெயரும் இடம் பெறுவது இழுக்கு என்று தந்தை நினைத்ததால் அன்னா என்கிற தனது பெயரோடு பாட்டியின் குடும்ப பெயரை சேர்த்து அன்னா அக்மதோவா ஆனார் ரஷ்யாவின் மிக முக்கியமான கவிஞர்.
தனது எழுத்துகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆண் பெயரில் எழுதினார் மேரி ஆன் எவான்ஸ். ஜார்ஜ் எலியட் என்றால் எல்லோருக்கும் தெரியும்.
வரலாறு நெடுகிலும் சமகால வரலாற்றிலும்கூட கவிதை ஒரு எதிர் செயல்பாடாக இருந்திருக்கிறது.  வல்லரசின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, எதேச்சதிகாரத்தின் முதுகெலும்பை உடைத்து நொறுக்க சில வார்த்தைகள் போதும் என்பதற்கு நம் காலச் சான்று துனிஷிய புரட்சி. தாரெக் முகமதுவின் முகத்தில் அறைந்து டிகாஜே (dégage") வெளியே போ என்று சொன்ன போது அந்த காவல்துறைப் பெண் அறிந்திருக்க மாட்டார், டிகாஜே அந்த நாட்டின் எழுச்சி வாசகமாக மாறும் என்று. அது ஒரு ஆட்சியை முடிவுக்குகொண்டு வரும் என்று.

வரலாறு நெடுகிலும் வல்லாதிக்கங்களை நோக்கி வலிமையான எதிர்குரல்களை எழுப்பியவர்களில் கவிஞர்கள் முக்கியமானவர்கள். அதற்காக கொலை செய்யவும், நாடு கடத்தவும், கைது செய்யவும் பட்டிருக்கிறார்கள் அவர்கள்.

அதிபர் அவர்களே
உங்களது 70 வயதில், பிறந்த நாளை போல ஒன்றில்
நீங்கள் எல்லா வருடங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்கிறோம்.
ஆனால் நாங்கள் இல்லை.
எல்லா வருடங்களும் நீங்கள் ஆட்சி செய்ய வேண்டும்
நாங்கள் ஆளப்பட வேண்டும்
ஒடுக்கப்பட வேண்டும்
அவமதிக்கப்பட வேண்டும்.

அகமத் நீகம் என்கிற கவிஞர் எகிப்து அதிபராக இருந்த முபாரக்கிற்கு எழுதிய கவிதை.  கவிதை வரிகளுக்காக கைதானவர்களுள் முக்கியமானவர்  நீகம். இறந்து இரு நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் அவனது கல்லறையை உடைத்து அதன் மீது சாலையை போடுமளவு உருது கவிஞர் வாலி குஜராதி மீது இந்துத்வவாதிகளுக்கு கோபம் இருந்தது.

தணிக்கை செய்யப்பட்ட கவிதைகளை தையற்கலைஞர்கள் ஆடைகளில் உள்புறமாக தைத்து நாடெங்கிலும் வாசிக்க அனுப்பி வைத்த வரலாறு நமது சமகாலத்தில் ஈராகில் நடந்தது.

அங்கிருந்துதான் லதீஃப் ஹல்மட் ஒரு பெண்ணின் இதயத்தைப் பற்றி எழுதுகிறார்.

கடவுச் சீட்டு இல்லாமல்
நான் நுழையக் கூடிய ஒரே நாடு,
ஒரு பெண்ணின் இதயம்தான்.
அங்கு எந்த காவலனும்
எனது அட்டையை கேட்பதில்லை.
ருசியான துயரங்களும்,
தணிக்கை செய்யப்பட்ட கவிதைகளும்
சட்டவிரோதமான சந்தோஷங்களும்
நிறைந்திருக்கும் எனது பெட்டியை
யாரும் சோதனை செய்வதில்லை.
கனமான  ஆயுதங்களை குவித்து வைக்காத
ஒரே நாடு,
ஒரு பெண்ணின் இதயம்.
தனது போர்களை குடிமக்கள் போராட வேண்டும்
என்று அது வற்புறுத்துவதும் இல்லை.

ஹல்மட் சொல்வது போல தணிக்கைகள் அற்றதுதான் பெண்ணின் இதயம்.
அதற்குதான் வரலாற்றில் எவ்வளவு உதாரணங்கள்!
910 வருடத்தை சேர்ந்த கவிஞர் ராபியா பால்கி. கவிதைகளின் ஊடாக ராபியாவின் காதலை அறிந்த சகோதரன் அவளது  நரம்புகளை அறுத்து கொல்லும் போதும்,  குருதியால் சுவர்களில் கவிதை எழுதிக்கொண்டிருந்தாள் ராபியா.

“உனது காதலால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.
தப்பித்தல் சாத்தியமில்லை.
காதல், எல்லைகள் அற்ற பெருங்கடல் போல.
புத்தியுள்ள யாரும் அதை நீந்தி கடக்கவேண்டும் என்று
நினைப்பதில்லை.
இறுதி வரை காதல் வேண்டுமென்றால்
ஏற்றுக்கொள்ள படாததை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்.
துயரங்களை புன்னகையுடன் வரவேற்க வேண்டும்.
விஷத்தை அருந்தி, அது தேன் என்று சொல்ல வேண்டும்.

இது ராபியா தனது ரத்தத்தால் எழுதிய கடைசி கவிதை.
வரலாற்றின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் இழைக்கிறார்கள்.
உயிர் போகலாம் என்று தெரிந்தும் என் காலத்து ஆப்கான் பெண்கள் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள். 2005ல் கவிதைகள் எழுதுவதற்காக கணவரால் கொல்லப்படுகிறார் நாதியா அஞ்சுமன்.

தோல்வியும் துயரமும் மட்டும் துணையிருக்க,
நான் இந்த மூலையில் தனித்திருக்கிறேன்.
எனது சிறகுகள் வெட்டப்பட்டிருக்கின்றன.
பறத்தல் இல்லாமல் நான் என்ன செய்வேன்?

என்கிற நாதியாவின் கேள்விக்கு இன்று எண்ணற்ற சிறகுகள் இருக்கின்றன.
அவளின் வெட்டப்பட்ட சிறகுகளில் ஒன்றுதான் இன்றும் ஈரானிய கவிதைகளில் தடை செய்யப்பட்டிருக்கும் பெண்ணுடல் என்கிற வார்த்தையாக துருத்திக் கொண்டிருக்கிறது.

லண்டாய் என்னும் ஆதி கவிதை வடிவத்தை தம் வசமாக்கியிருக்கும் இன்றைய ஆப்கான் இளம் பெண்களும்  துப்பாக்கிகளையும் அமிலக் குப்பிகளையும் நோக்கி கவிதைகளை நீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

“நான் ஒரு பெண்.
என்னால் முடியாதது எதுவும் இல்லை
செருக்குடன் வாழும் பெண் நான்.
உரிமைகளுக்காக போராடும் பெண்.
எப்போதும் சரணடையாத
பெண் நான்”

என்று தன்னை நோக்கிய எல்லா அடக்குமுறைகளுக்கும் பதில் சொல்கிறார் கரிமா.

லண்டாய் நமது நாட்டுப்புறப் பாடல்களை போல. வாய்மொழிப் பாடல்களை பெண்கள் அடக்குமுறைக் காலங்களில்  தங்களது ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.  பெயரற்றவர்களாக அவர்கள் முன் வைக்கும் லண்டாய் என்னும் இருவரி  கவிதைகளில் ஆப்கானின் சராசரி சமூகம் நினைத்துப் பார்க்கவே முடியாத எள்ளலும் செருக்கும் தெரிக்கின்றன.

கிழவனோடு கலவி கொள்வது
கரும்புள்ளிகளை கொண்டு நோயுற்று வற்றிய சோளத்தை புணர்வது போல


என்று பாடுவதன் மூலம் தன்னைவிட பல வருடங்கள் முதியவருடனான திருமணத்தை எள்ளி நகையாடுகிறாள் அவள்.

நேற்றிரவு வரமுடியாத நீ துரதிஷ்டசாலி
கட்டிலின் கடைந்த மரக்காலை உனக்கு மாற்றாக பயன் படுத்திக் கொண்டேன்
-
இங்கிருக்கும் எவனுக்கும் துணிவில்லையா?
என் உள்ளாடைக்குள் தீண்டப்படாது எரிந்து கொண்டிருப்பவற்றை காண?
*
பசியில் துடிக்கும் நாயின் மூக்கு சதை கொழுப்பை குதறி எடுப்பதை போல
என் கீழுதட்டிலிருந்து ஒரு முத்தத்தை கைப்பற்றிக் கொண்டது அந்த கிழட்டு ஆடு.

என்றெல்லாம் ஒருத்தி பாடுகிறாள்.

படுக்கையறையிலும் போர்களத்திலும் ஆண்களின் இயலாமையை சீண்டும் லண்டாய் கவிதை வரிகள் ஆஃப்கானிஸ்தானில் பெரும் சலனங்களை உண்டாக்கும்  வல்லமை கொண்டவை. இந்த வாய்மொழி பாடல்கள் மூலம் ஆப்கானிஸ்தானின் சமூக கட்டுக்கோப்பை சில வார்த்தைகளில் உதிர்த்துவிடுகிறார்கள் இந்த கவிஞர்கள்.

லண்டாயின் மிகப்பெரிய பலமே அது ஒரு கூட்டு முயற்சி என்பதுதான். அதை எழுதுவது 
ஒருவர் மட்டுமல்ல. லண்டாய் என்னும் கூரிய கவிதைகளை சிலர் எழுதுகிறார்கள்,சிலர் 
பாடுகிறார்கள், சிலர் பகிர்கிறார்கள். சிலர் அதை திரும்பப் பாடுகிறார்கள். லண்டாய் 
பெண்களுக்கானது. சர்வதேச சமூகம் நினைத்துக்கொண்டிருப்பது போல ஆஃப்கான்  பெண்கள் தோல்வியுற்றவர்களோ வீழ்த்தப்பட்டவர்களோ அல்ல என்பதற்கான சாட்சி, 
லண்டாய். அது யாருக்கும் சொந்தமில்லை என்பதாலேயே லண்டாய் இன்னமும் உயிர் வாழ்கிறது.
ஆஃப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் கவிதை என்பது  எதிர்ப்பியக்கம். அது ஒரு அரசியல் செயல்பாடு. இந்த அரசியல் எதிர்ப்பியக்கத்தின் களத்தில் தங்களது உயிரையும் தர  தயங்காதவர்கள்தான் லண்டாயை எழுதிக் கொண்டிருப்பவர்கள்.
விஜயலட்சுமியின் மொழிபெயர்ப்பில் உருவாகியிருக்கும் லண்டாய் பற்றிய இந்த அறிமுக நூல்,  தமிழில் இதுவரை மேற்கொள்ளபடாத ஒரு முயற்சி. உயிரை கோரும் நெருக்கடிகளுக்கிடையிலும் தாம் நம்பும் ஒரு கலை வடிவத்தை எந்த 
சமரசமுமின்றி கைகொண்டிருக்கும் ஆஃப்கான் பெண்களின் உலகத்திற்குள் நம்மை
அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.

ஒரு நாள் மனிதர் வாழ வேண்டும் என்று நினைத்தால்
விதி, பதில் சொல்லியே தீர வேண்டும்.
இரவு காணாமல் போக வேண்டும்
தளைகள் உடைய வேண்டும்

என்று பாடினார் துனிஷிய கவிஞர் அபு அல் கசிம்.

பேனாக்களை கொண்டு காகிதங்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு நாள் வெல்வோம் என்கிற பிரகடனத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ஆஃப்கான் பெண்கள்.
தனக்கான தீர்ப்பை தானே எழுதிவிட்டு பேனா முனையை முறித்துப் போட்டிருக்கும் பெருமாள் முருகன் என்கிற எழுத்தாளனும் என்றாவது ஒரு நாள் வாழ வேண்டும் என்று  நினைப்பார். தமிழ் சூழலில் பெண்ணெழுத்து தன்னைகூர்தீட்டிக்கொள்ள வேண்டிய தேவை பற்றி இந்த புத்தகத்தின்  முன்னுரையில் சொல்லியிருக்கிறார் பாலபாரதி.  பெருமாள் முருகனின் முறிந்த பேனா முனையை கொண்டு நாம் எல்லோரும் லண்டாய் எழுதி பழகுவோம்.

 காலம் பதில் சொல்லி தீர வேண்டும்.

  
(ச. விஜயலட்சுமியின் மொழிபெயர்ப்பில் இன்று வெளியிடப்பட்ட லண்டாய் – ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நான் வாசித்த குறிப்பு)

சென்னை புத்தகக் காட்சியில்

சென்னை புத்தகக் காட்சியில் 13.01.2015 அன்று நடைபெற்ற ”கருத்துரிமைக்கு ஆதரவான ஒன்று கூடல்”. தமிழின் மிக முக்கியமான கலைஞர்கள், படைப்பாளிகள், சினிமா இயக்குனர்கள், கவிஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஆவணப்பட இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
பெருமாள் முருகனுக்கு ஆதரவான போராட்டமும் இயக்கமும் அடுத்தக்கட்டத்தை அடைந்துள்ளது.
வீறுபெற்றுள்ளது, கருத்துரிமைக்கான குரல்!
குட்டி ரேவதி

கோவையில் ஆர்ப்பாட்டம்

படைப்பு சுதந்திரத்தை பறிக்காதே ! பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கோவையில் ஆர்ப்பாட்டம்- கோவை, ஜன. 13-

படைப்பு சுதந்திரத்தை பறிக்காதே, மாதொருபாகன் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும், அவரது படைப்புக்கும் பாதுகாப்பு வழங்கு என்கிற கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுஎகசவின் மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தமுஎகசவின் மாவட்ட செயலாளர் தி.மணி, கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளர் பாப்பா ரமணி, எழுத்தாளர் ச.பாலமுருகன்,
வெண்மனி, சுந்தரமூர்த்தி, குசேலர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மதவெறி சக்திகளை தமிழக அரசு கைது செய்யவேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

பெருமாள் முருகன் நாவல் பற்றிய பிரச்சினை வெறுமே கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல.!


பெருமாள் முருகன் நாவல் பற்றிய பிரச்சினை வெறுமே கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல. ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார் இந்துத்துவ அமைப்புகளின் பெரும் திட்டத்தின் ஒரு சிறுபகுதி மட்டுமே. தமிழ்நாட்டில் 2016 தேர்தலுக்கு முன் ஹிந்து ஓட்டுகளை ஒரு சார்பாக ஹிந்து உணர்வுடன் திரட்டி தங்கள் ஓட்டுவிகிதத்தையும் இடங்களையும் அதிகரிப்பதே அவர்கள் நோக்கம். அதற்கான உத்திகளில் இதுவும் ஒன்று.
நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்களை முசாபர்நகர் போல தமிழ்நாட்டில் நடத்த இயலாது. தவிரமத்தியில் மோடி ஆட்சி என்பதால் இப்போது கலவர வழிமுறை அதிகம் உதவாது. எனவே மென் வன்முறை உத்திகளையே கையாள்கிறார்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூரில் ஏதேனும் பிரச்சினையைப் பயன்படுத்தி அந்த வட்டார ஹிந்து ஓட்டுகளை ஓரணி சேர்ப்பதே திட்டம்.
நம் ஹிந்து திருவிழா , நம் ஹிந்துப் பெண்கள், நம் ஹிந்து மதம் இழிவுபடுத்தப்படுகிறது என்ற பிரசாரத்தின் மூலம் கொங்கு பகுதியில் ஹிந்து ஓட்டுகளை திரட்ட நான்கு வருடம் பழைய பெருமாள் முருகன் நாவலை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் தலித் எழுச்சியை ஆதரிப்பவர், சாதியத்தை எதிர்ப்பவர் என்பதால் கொங்கு பேரவை போன்ர சாதிய அமைப்புகள் இதில் உக்கிரமாக இயங்குகின்றன.
வட தமிழ் நாட்டில் வன்னியர் ஓட்டு கைவிட்டுப் போனாலும், தலித் ஓட்டை திரட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக பி.ஜே.பி தமிழ்நாட்டில் பொங்கல் விழா என்ரு ஒன்று இருப்பதையும் தலித்துகள் இருப்பதையும் திடீரென கண்டுபிடித்துள்ளது. 35 வருடமாக எந்த பிஜேபி கட்சித்தலைவரும் கொண்டாடாத பொங்கலை அமித் ஷா இந்த முறை வட தமிழக தலித் கிராமம் ஒன்றில் கொண்டாடப் போவதாக அறிவித்தது. இன்னொரு பக்கம் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டைக் காட்டி அங்குள்ல சில சாதிகளை திரட்டிக்கொள்ள, வடபுலத்திலிருந்து தமிழின் மேன்மையை உணர, வாராது வந்த மாமணி போல நட்டு வைக்கப்பட்டிருக்கும் தருண் விஜய் எம்.பி, ஜல்லிக்கட்டுக்காக கூவத்தொடங்கிவிட்டார்.
அடுத்த சில மாதங்களில் தமிழகத்திந் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஹிந்து ஓட்டுகளை ஒருபக்கம் திரட்ட உள்ளூர் விஷயங்கள் இப்படி இந்துத்துவ அமைப்புகளால் கையில் எடுக்கப்படுவதைப் பார்க்கப் போகிறோம்.ஒரு பெரும் சதியின் சிறு பகுதியே பெருமாள் முருகன் எதிர்ப்பு. இதை உணர்ந்து ஒட்டுமொத்தமாகவே எதிர்க்கவேண்டும்.
ஞாநி

தன் மரணத்தை தானே அறிவிக்க நேர்ந்த கொடுமை!


தன் மரணத்தை தானே அறிவிக்க நேர்ந்த கொடுமை ஒரு படைப்பாளிக்கு ஏற்பட்டு இருப்பதை தமிழகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பெருமாள் முருகனின் அறிக்கையை படித்த பிறகு துயரத்தை விட, ஆத்திரமே மேலோங்கி வருகிறது. ஒரு எழுத்தாளன் எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பதை இங்கே நாலுபேர் தீர்மானிக்க முடியுமானால், அந்த சமூகம் பாசிசத்திற்கு இரையாகிக்கொண்டு இருக்கிறது என்றே அர்த்தம். சமூகம் என்பது அந்த நாலு பேர் அல்லவென்றும் அவர்களை தீர்மானிக்க விடக் கூடாது என்றும் அறிவும், சுதந்திரமும் கொண்ட சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது. ஒரு படைப்பை தன்னிலிருந்து வெளியிட்ட பிறகு, படைப்பாளி அந்தப் படைப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறான். அந்த படைப்பு சமூகத்திற்கும், வாசிக்கிற மக்களுக்கும் சொந்தமாகிறது. கொண்டாடியோ, நிராகரித்தோ படைப்பின் ஆயுளை மக்களே தீர்மானிக்கிறார்கள். எனவே- எந்த படைப்பு மக்களிடம் செல்லக் கூடாது என்று அந்த நாலு பேர்’நினைத்தார்களோ அதனை முடிந்த வரையில் மக்களிடம் கொண்டு செல்கிற பணியை நாம் செய்ய வேண்டும். நடு வீதிகளில் கூட்டமாய் திரண்டு ‘மாதொரு பாகன்’ நாவலின் பக்கங்களை உரக்க வாசிக்க வேண்டும். மக்கள் தீர்மானிக்கட்டும். பெருமாள் முருகனையோ, அந்த நாலுபேரையோ தீர்மானிக்க விட வேண்டாம்.

மாதவராஜ்