Thursday, January 15, 2015

பெருமாள் முருகனை நாம் ஆதரிக்ககூடாது என்று சொல்பவர்கள் யார்?

அமுதன் ஆர்.பி.
மாதொருபாகன்' நாவல் தொடர்பான சர்ச்சையில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகப் பேசுவதை பல "டெக்னிகல்" காரணங்கள் கூறி நிராகரிக்க, எதிர்க்க முற்படுவதனால் தமிழ்நாட்டில் கருத்துரிமையைப் பாதுகாக்க, பாசிஸ்டுகளை எதிர்க்க உருவாகும் கருத்தொற்றுமையைக் குலைப்பதைத் தவிர என்ன ஏற்படும்?
காசுவை ஆதரிப்போர், எதிர்ப்போர், நிதி நிறுவனங்களை ஆதரிப்போர், எதிர்ப்போர், நாவலை ஆதரிப்போர், எதிர்ப்போர் ஆகிய எல்லோரும் ஒரு நாவலின் பிரதிகள் இந்துத்துவ சகதிகளினால் (சக்திகள் என்று அவர்களுக்கு ஏன் பெரிய வார்த்தை?) எரிக்கப்படுவதையும், ஒரு எழுத்தாளர் மிரட்டப்படுவதையும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டிக்க வேண்டும் என்பது முதல்படி.
விவாதம் வேண்டும் என்பதும் விமர்சனம் வேண்டும் என்பதும் மறுப்பதற்கில்லை. யாரும் இதற்கு அப்பாற்ப்பட்டவர் இல்லை.
இந்துத்துவ சகதிகள் எரிக்கவில்லை என்றும் பொதுமக்கள் தான் செய்தனர் என்றும் சொல்வது இந்த சகதிகள் காலம் காலமாகச் சொல்லி வரும் பொய்கள் தான்.
கோட்சே கூடத் தான் "டெக்னிகலாக" நான் ஆர்.எஸ்.எஸ். காரன் இல்லை என்று சொன்னார். அதற்காக அவரது சிந்தாந்தப் பயிற்சி, உந்துதல், துப்பாக்கி எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் இருந்து வரவில்லை என்று சொல்லமுடியுமா?
காந்தியைக் கொலை செய்த போது நான் அந்த அமைப்பில் இல்லை. போன வாரம் தான் விலகினேன் என்றால் நாங்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமா?
மேலும் இவர்கள் வேலையே பொய்யும் புரட்டையும் சொல்லி வெறுப்பையும் பகையையும் சந்தேகத்தையும் பரப்புவது தானே?
எல்லாக் கலவரங்களையும் இவர்களா முன்னின்று நடத்துகின்றனர்? கலவரங்களுக்கும் வன்செயல்களுக்கும் ஆட்களைத் தயார் செய்வது தான் இவர்கள் வேலை. பிரச்சாரம் செய்வது, ஆயுதங்கள் கொடுப்பது, வன்செயல்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்குவது, வன்செயல்கள் தடையில்லாமல் நடக்க உதவுவது, நடந்தபின் தப்பித்து ஓடுவது தான் இவர்கள் வேலை.
மாதொருபாகன் விஷயத்தில் திருச்செங்கோடு பாஜக தலைவர்களே முதலில் எல்லா வேலைகளையும் செய்திருக்கின்றனர்.
நாளொன்றுக்கு நாவலிலிருந்து இரண்டு பக்கங்களை எடுத்து அதை 5000 ஜெராக்ஸ் பிரதிகள் போட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருக்கின்றனர்.
வழக்கம் போல அதில் பெருமாள் முருகனின் எண்ணையும் இணைத்து மக்கள் அலைபேசியில் எழுத்தாளரை மிரட்டுவதற்கும் வசை பாடுவதற்கும் துணை போயிருக்கின்றனர்.
இதைத் தான் தினமலர் பத்திரிக்கை அணு உலை எதிர்ப்புப் போராளி உதயக்குமாருக்கும் செய்தது. அவரது எண்ணைப் பத்திரிக்கையில் போட்டு பொதுமக்களை அவருக்கு எதிராகத் தூண்டியது.
இப்போது நாங்கள் செய்யவில்லை. பொதுமக்கள் செய்தனர் என்கின்றனர்.
பித்தலாட்டமும் மோசடியும் தான் இவர்களின் கருவிகள்!

No comments:

Post a Comment