Thursday, January 15, 2015

பெருமாள் முருகனின் முறிந்த பேனாவை எடுத்து நாம் எல்லோரும் லண்டாய் பழகுவோம்.

கவிதா முரளிதரன்

கணவருடன் பாலியல் உறவு கொள்ள மறுக்கும் பெண்ணை பட்டினி போட்டு கணவன் கொல்லலாம்  என்று சட்டம் இயற்றப்பட்ட ஒரு நாட்டில், பெண் கவிதை எழுத துணிந்தால் அந்த கவிதையின் பாடு பொருள் என்னவாக இருக்கும்? அதை விட முக்கியமாக அவள் என்ன பெயரில் கவிதை எழுதுவாள்?

“Anon, who wrote so many poems without signing them, was often a woman.”  ―

என்கிறார் விர்ஜினியா வுல்ப். தனது கையெழுத்தை இடாமல் பெயரற்றவர்களாக கவிதை எழுதிச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

தனது மகளின் கவிதைகளில் தனது பெயரும் இடம் பெறுவது இழுக்கு என்று தந்தை நினைத்ததால் அன்னா என்கிற தனது பெயரோடு பாட்டியின் குடும்ப பெயரை சேர்த்து அன்னா அக்மதோவா ஆனார் ரஷ்யாவின் மிக முக்கியமான கவிஞர்.
தனது எழுத்துகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆண் பெயரில் எழுதினார் மேரி ஆன் எவான்ஸ். ஜார்ஜ் எலியட் என்றால் எல்லோருக்கும் தெரியும்.
வரலாறு நெடுகிலும் சமகால வரலாற்றிலும்கூட கவிதை ஒரு எதிர் செயல்பாடாக இருந்திருக்கிறது.  வல்லரசின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, எதேச்சதிகாரத்தின் முதுகெலும்பை உடைத்து நொறுக்க சில வார்த்தைகள் போதும் என்பதற்கு நம் காலச் சான்று துனிஷிய புரட்சி. தாரெக் முகமதுவின் முகத்தில் அறைந்து டிகாஜே (dégage") வெளியே போ என்று சொன்ன போது அந்த காவல்துறைப் பெண் அறிந்திருக்க மாட்டார், டிகாஜே அந்த நாட்டின் எழுச்சி வாசகமாக மாறும் என்று. அது ஒரு ஆட்சியை முடிவுக்குகொண்டு வரும் என்று.

வரலாறு நெடுகிலும் வல்லாதிக்கங்களை நோக்கி வலிமையான எதிர்குரல்களை எழுப்பியவர்களில் கவிஞர்கள் முக்கியமானவர்கள். அதற்காக கொலை செய்யவும், நாடு கடத்தவும், கைது செய்யவும் பட்டிருக்கிறார்கள் அவர்கள்.

அதிபர் அவர்களே
உங்களது 70 வயதில், பிறந்த நாளை போல ஒன்றில்
நீங்கள் எல்லா வருடங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்கிறோம்.
ஆனால் நாங்கள் இல்லை.
எல்லா வருடங்களும் நீங்கள் ஆட்சி செய்ய வேண்டும்
நாங்கள் ஆளப்பட வேண்டும்
ஒடுக்கப்பட வேண்டும்
அவமதிக்கப்பட வேண்டும்.

அகமத் நீகம் என்கிற கவிஞர் எகிப்து அதிபராக இருந்த முபாரக்கிற்கு எழுதிய கவிதை.  கவிதை வரிகளுக்காக கைதானவர்களுள் முக்கியமானவர்  நீகம். இறந்து இரு நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் அவனது கல்லறையை உடைத்து அதன் மீது சாலையை போடுமளவு உருது கவிஞர் வாலி குஜராதி மீது இந்துத்வவாதிகளுக்கு கோபம் இருந்தது.

தணிக்கை செய்யப்பட்ட கவிதைகளை தையற்கலைஞர்கள் ஆடைகளில் உள்புறமாக தைத்து நாடெங்கிலும் வாசிக்க அனுப்பி வைத்த வரலாறு நமது சமகாலத்தில் ஈராகில் நடந்தது.

அங்கிருந்துதான் லதீஃப் ஹல்மட் ஒரு பெண்ணின் இதயத்தைப் பற்றி எழுதுகிறார்.

கடவுச் சீட்டு இல்லாமல்
நான் நுழையக் கூடிய ஒரே நாடு,
ஒரு பெண்ணின் இதயம்தான்.
அங்கு எந்த காவலனும்
எனது அட்டையை கேட்பதில்லை.
ருசியான துயரங்களும்,
தணிக்கை செய்யப்பட்ட கவிதைகளும்
சட்டவிரோதமான சந்தோஷங்களும்
நிறைந்திருக்கும் எனது பெட்டியை
யாரும் சோதனை செய்வதில்லை.
கனமான  ஆயுதங்களை குவித்து வைக்காத
ஒரே நாடு,
ஒரு பெண்ணின் இதயம்.
தனது போர்களை குடிமக்கள் போராட வேண்டும்
என்று அது வற்புறுத்துவதும் இல்லை.

ஹல்மட் சொல்வது போல தணிக்கைகள் அற்றதுதான் பெண்ணின் இதயம்.
அதற்குதான் வரலாற்றில் எவ்வளவு உதாரணங்கள்!
910 வருடத்தை சேர்ந்த கவிஞர் ராபியா பால்கி. கவிதைகளின் ஊடாக ராபியாவின் காதலை அறிந்த சகோதரன் அவளது  நரம்புகளை அறுத்து கொல்லும் போதும்,  குருதியால் சுவர்களில் கவிதை எழுதிக்கொண்டிருந்தாள் ராபியா.

“உனது காதலால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.
தப்பித்தல் சாத்தியமில்லை.
காதல், எல்லைகள் அற்ற பெருங்கடல் போல.
புத்தியுள்ள யாரும் அதை நீந்தி கடக்கவேண்டும் என்று
நினைப்பதில்லை.
இறுதி வரை காதல் வேண்டுமென்றால்
ஏற்றுக்கொள்ள படாததை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்.
துயரங்களை புன்னகையுடன் வரவேற்க வேண்டும்.
விஷத்தை அருந்தி, அது தேன் என்று சொல்ல வேண்டும்.

இது ராபியா தனது ரத்தத்தால் எழுதிய கடைசி கவிதை.
வரலாற்றின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் இழைக்கிறார்கள்.
உயிர் போகலாம் என்று தெரிந்தும் என் காலத்து ஆப்கான் பெண்கள் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள். 2005ல் கவிதைகள் எழுதுவதற்காக கணவரால் கொல்லப்படுகிறார் நாதியா அஞ்சுமன்.

தோல்வியும் துயரமும் மட்டும் துணையிருக்க,
நான் இந்த மூலையில் தனித்திருக்கிறேன்.
எனது சிறகுகள் வெட்டப்பட்டிருக்கின்றன.
பறத்தல் இல்லாமல் நான் என்ன செய்வேன்?

என்கிற நாதியாவின் கேள்விக்கு இன்று எண்ணற்ற சிறகுகள் இருக்கின்றன.
அவளின் வெட்டப்பட்ட சிறகுகளில் ஒன்றுதான் இன்றும் ஈரானிய கவிதைகளில் தடை செய்யப்பட்டிருக்கும் பெண்ணுடல் என்கிற வார்த்தையாக துருத்திக் கொண்டிருக்கிறது.

லண்டாய் என்னும் ஆதி கவிதை வடிவத்தை தம் வசமாக்கியிருக்கும் இன்றைய ஆப்கான் இளம் பெண்களும்  துப்பாக்கிகளையும் அமிலக் குப்பிகளையும் நோக்கி கவிதைகளை நீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

“நான் ஒரு பெண்.
என்னால் முடியாதது எதுவும் இல்லை
செருக்குடன் வாழும் பெண் நான்.
உரிமைகளுக்காக போராடும் பெண்.
எப்போதும் சரணடையாத
பெண் நான்”

என்று தன்னை நோக்கிய எல்லா அடக்குமுறைகளுக்கும் பதில் சொல்கிறார் கரிமா.

லண்டாய் நமது நாட்டுப்புறப் பாடல்களை போல. வாய்மொழிப் பாடல்களை பெண்கள் அடக்குமுறைக் காலங்களில்  தங்களது ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.  பெயரற்றவர்களாக அவர்கள் முன் வைக்கும் லண்டாய் என்னும் இருவரி  கவிதைகளில் ஆப்கானின் சராசரி சமூகம் நினைத்துப் பார்க்கவே முடியாத எள்ளலும் செருக்கும் தெரிக்கின்றன.

கிழவனோடு கலவி கொள்வது
கரும்புள்ளிகளை கொண்டு நோயுற்று வற்றிய சோளத்தை புணர்வது போல


என்று பாடுவதன் மூலம் தன்னைவிட பல வருடங்கள் முதியவருடனான திருமணத்தை எள்ளி நகையாடுகிறாள் அவள்.

நேற்றிரவு வரமுடியாத நீ துரதிஷ்டசாலி
கட்டிலின் கடைந்த மரக்காலை உனக்கு மாற்றாக பயன் படுத்திக் கொண்டேன்
-
இங்கிருக்கும் எவனுக்கும் துணிவில்லையா?
என் உள்ளாடைக்குள் தீண்டப்படாது எரிந்து கொண்டிருப்பவற்றை காண?
*
பசியில் துடிக்கும் நாயின் மூக்கு சதை கொழுப்பை குதறி எடுப்பதை போல
என் கீழுதட்டிலிருந்து ஒரு முத்தத்தை கைப்பற்றிக் கொண்டது அந்த கிழட்டு ஆடு.

என்றெல்லாம் ஒருத்தி பாடுகிறாள்.

படுக்கையறையிலும் போர்களத்திலும் ஆண்களின் இயலாமையை சீண்டும் லண்டாய் கவிதை வரிகள் ஆஃப்கானிஸ்தானில் பெரும் சலனங்களை உண்டாக்கும்  வல்லமை கொண்டவை. இந்த வாய்மொழி பாடல்கள் மூலம் ஆப்கானிஸ்தானின் சமூக கட்டுக்கோப்பை சில வார்த்தைகளில் உதிர்த்துவிடுகிறார்கள் இந்த கவிஞர்கள்.

லண்டாயின் மிகப்பெரிய பலமே அது ஒரு கூட்டு முயற்சி என்பதுதான். அதை எழுதுவது 
ஒருவர் மட்டுமல்ல. லண்டாய் என்னும் கூரிய கவிதைகளை சிலர் எழுதுகிறார்கள்,சிலர் 
பாடுகிறார்கள், சிலர் பகிர்கிறார்கள். சிலர் அதை திரும்பப் பாடுகிறார்கள். லண்டாய் 
பெண்களுக்கானது. சர்வதேச சமூகம் நினைத்துக்கொண்டிருப்பது போல ஆஃப்கான்  பெண்கள் தோல்வியுற்றவர்களோ வீழ்த்தப்பட்டவர்களோ அல்ல என்பதற்கான சாட்சி, 
லண்டாய். அது யாருக்கும் சொந்தமில்லை என்பதாலேயே லண்டாய் இன்னமும் உயிர் வாழ்கிறது.
ஆஃப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் கவிதை என்பது  எதிர்ப்பியக்கம். அது ஒரு அரசியல் செயல்பாடு. இந்த அரசியல் எதிர்ப்பியக்கத்தின் களத்தில் தங்களது உயிரையும் தர  தயங்காதவர்கள்தான் லண்டாயை எழுதிக் கொண்டிருப்பவர்கள்.
விஜயலட்சுமியின் மொழிபெயர்ப்பில் உருவாகியிருக்கும் லண்டாய் பற்றிய இந்த அறிமுக நூல்,  தமிழில் இதுவரை மேற்கொள்ளபடாத ஒரு முயற்சி. உயிரை கோரும் நெருக்கடிகளுக்கிடையிலும் தாம் நம்பும் ஒரு கலை வடிவத்தை எந்த 
சமரசமுமின்றி கைகொண்டிருக்கும் ஆஃப்கான் பெண்களின் உலகத்திற்குள் நம்மை
அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.

ஒரு நாள் மனிதர் வாழ வேண்டும் என்று நினைத்தால்
விதி, பதில் சொல்லியே தீர வேண்டும்.
இரவு காணாமல் போக வேண்டும்
தளைகள் உடைய வேண்டும்

என்று பாடினார் துனிஷிய கவிஞர் அபு அல் கசிம்.

பேனாக்களை கொண்டு காகிதங்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு நாள் வெல்வோம் என்கிற பிரகடனத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ஆஃப்கான் பெண்கள்.
தனக்கான தீர்ப்பை தானே எழுதிவிட்டு பேனா முனையை முறித்துப் போட்டிருக்கும் பெருமாள் முருகன் என்கிற எழுத்தாளனும் என்றாவது ஒரு நாள் வாழ வேண்டும் என்று  நினைப்பார். தமிழ் சூழலில் பெண்ணெழுத்து தன்னைகூர்தீட்டிக்கொள்ள வேண்டிய தேவை பற்றி இந்த புத்தகத்தின்  முன்னுரையில் சொல்லியிருக்கிறார் பாலபாரதி.  பெருமாள் முருகனின் முறிந்த பேனா முனையை கொண்டு நாம் எல்லோரும் லண்டாய் எழுதி பழகுவோம்.

 காலம் பதில் சொல்லி தீர வேண்டும்.

  
(ச. விஜயலட்சுமியின் மொழிபெயர்ப்பில் இன்று வெளியிடப்பட்ட லண்டாய் – ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நான் வாசித்த குறிப்பு)

No comments:

Post a Comment